அரசியல் விரோதத்தை மறந்து எதிரணியினரின் திருமணத்துக்கு வந்த அதிசயத் தலைவர்!

பாட்னா

பிகார் துணை முதல்வர் மகன் திருமணத்துக்கு லாலு பிரசாத் யாதவ் வருகை புரிந்தார்.

பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடியின் மகனுக்கும் கொல்கத்தவை சேர்ந்த பெண் ஆடிட்டர் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.  மிகவும் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் மணமகன் கதர் ஆடைகளையும்,  மணமகள் சிவப்புச் சேலையும் அணிந்திருந்தனர்.   பரிசுகள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப் பட்டிருந்த இந்த திருமணத்தில் வந்தவர்களுக்கு 4 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன.  மற்றும் கண் தானம் வேண்டுகோள் நோட்டிசுகள் தரப்பட்டன.

பல மத்திய அமைச்சர்கள், பீகார் முதல்வர், ஆளுனர், அமைச்சர்கள் வந்திருந்த இந்த திருமணத்தில் ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கலந்துக் கொண்டது பலருக்கும் அதிசயமாக இருந்தது.  சுஷில் குமார் மோடியை லாலுவின் கட்சியினர், குறிப்பாக லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் கடுமையாக தாக்கி வரும் இந்த வேளையில் லாலு அரசியல் விரோதங்களை பொருட்படுத்தாமல் இந்த திருமணத்துக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.