பீகார் மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், முதல்-அமைச்சராக இருக்கிறார். இந்த கூட்டணியில் பா.ஜ.க.வும், மத்திய அமைச்சர் பஸ்வான் கட்சியும் இடம் பெற்றுள்ளன.
லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சி, பீகாரில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு, தண்டனை பெற்று, ராஞ்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் தேதியை அறிவிக்கும் போது, ஆர்.ஜே,டி. என்ற கட்சியே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டி செயல்படும் முதல்-அமைச்சர் நிதீஷ்குமார், லாலுவின் கட்சியில் இருந்து முக்கிய ஆட்களை எல்லாம் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைத்து வருகிறார்.

கடந்த திங்கள் கிழமை (17 ஆம் தேதி ) ஆர்.ஜே.டி.கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் , ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர்.

நேற்று மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் ஆர்.ஜே.டி. கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்துள்ளனர்.இவர்களில் லாலு பிரசாத் யாதவின் சம்மந்தி சந்திரிகா ராயும் ஒருவர் என்பதால், பீகார் தேர்தல் களம், எதிர் பாராத திருப்பங்களை எல்லாம் சந்திக்க போகிறது.

சந்திரிகா ராய், ஒரு காலத்தில் லாலுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இப்போது ‘பர்சா’ தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இவர் மகள் ஐஸ்வர்யாவை, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாவ் யாதவ் திருமணம் செய்துள்ளார்.
சில மாதங்களிலேயே கணவன் –மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, விவாகரத்து கேட்டு இருவருமே நீதிமன்றம் சென்றுள்ளனர்.

தேஜ் பிரதாப் –ஐஸ்வர்யா இடையேயான மனக்கசப்பு நான்கு சுவர்களோடு நின்று போக வில்லை.
போலீஸ் நிலையம் வரைக்கும் விவகாரம் முற்றி, கொச்சையாக சொல்வதானால், ஊரையே நாறடித்தது.

கணவனுடன் ஐஸ்வர்யாவுக்கு பேச்சுவார்த்தை இல்லையென்றாலும், கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை, அவர் மாமனார் லாலுவின் பாட்னா இல்லத்தில் அத்தை ராப்ரிதேவியுடன் தான் இருந்தார்.
ஒரு இரவு பொழுதில் மாமியார்- மருமகள் இடையே சண்டை வெடித்து உள்ளூர் காவல் நிலையத்தில் இருவருமே புகார் கொடுக்கும் அளவுக்கு பிரச்சினை முற்றியது.

‘’லாலுவின் குடும்பத்தை இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன்’’ என அப்போது சந்திரிகா ராய் செய்த சபதம் நேற்று , அவரை லாலுவின் எதிரியான நிதீஷ்குமார் கட்சியில் சேர வைத்துள்ளது.ஆர்.ஜே.டி.யில் இருந்து விலகி, ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்துள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது கனவாக இருக்கலாம்.
சந்திரிகா ராயின், இலக்கு அதுவல்ல.

தன் மகள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையை பாழாக்கிய அவரது கணவன் தேஜ் பிரதாப் யாதவ், அவரது தம்பி தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரின் அரசியல் வாழ்க்கையை அழித்து விட வேண்டும் என்பதே அவரது லட்சியம்.

அண்ணன் –தம்பி இருவரு,மே இப்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். தேஜஸ்வி யாதவ், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார்.  ஆர்.ஜே.டி. கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் அவர் தான்.

லாலு கட்சி கூட்டணி, ஒருவேளை தேர்தலில் ஜெயித்தால், தேஜஸ்வி தான் பீகார் முதல்வர் என்ற நிலையில், எதிர் அணியில் இணைந்துள்ளார், லாலுவின் சம்மந்தி.

ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த கையோடு செய்தியாளர்களை சந்தித்த சந்திரிகா ராய்,’ என் மகள் ஐஸ்வர்யா தேர்தலில் போட்டியிடுவார்’’ என அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

கணவனை எதிர்த்தோ அல்லது கொளுந்தனை எதிர்த்து அவர் போட்டியிடக்கூடும். ’’ அண்ணன் –தம்பி இருவரும் எந்த தொகுதியில் நிற்கப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நான் ஆவலாய் இருக்கிறேன். ஒன்று உறுதி. பீகார் மாநிலத்தில், அவர்கள் இருவருக்குமே பாதுகாப்பான தொகுதி எதுவுமே கிடையாது’’ என்ற சந்திரிகா ராயின் குரலில் வன்மம் இருந்தது.

-பா.பாரதி.