ராஞ்சி:

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தன்னை குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின் ஒரு ட்வீட் பதிந்துள்ளார்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலுவை கால்நடை தீவனம் தொடர்பாக மாவட்ட கருவூலத்தில் இருந்து ரூ.84.5 லட்சம் எடுத்து மோசடி செய்தது தொடர்பான வழக்கில் குற்றவாளி என ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. இதனயொட்டி லாலு மீண்டும் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

மாட்டு தீவன ஊழல் தொடர்புடைய செலவிற்காக, கடந்த 1991 முதல் 94 காலக்கட்டத்தில்,  பீஹாரின் தியோகர் மாவட்ட கருவூலத்தில் இருந்து, 84.5 லட்சம் ரூபாய் பணம் எடுத்து மோசடி செய்தது குறித்து தொடரப்பட்ட வழக்கில், லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா உட்பட, 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.  அவர்களில், 11 பேர் வழக்கு விசாரணையின்போதே இறந்து விட்டனர்; ஒருவர், சி.பி.ஐ., அப்ரூவராக மாறினார்.

நேற்று இந்த வழக்கில் லாலு குற்றவாளி என்றும், முன்னாள் முதல்வர் ஜெகன்நாத்மிஸ்ரா விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு பின்னர் லாலு ட்விட்டரில் ஒரு பதிவு இட்டுள்ளார்.  அதில், ”என் மீது களங்கம் கற்பிக்க பா.ஜ.க.  வினர் முயற்சி செய்கின்றனர்.  ஆனால் பீகார் மக்கள் அனைவரும் என் பக்கமே உள்ளனர். உண்மை இறுதியில் வெல்லும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில்   பா.ஜ.க.  தரப்பில் நீதி வென்றுள்ளது என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.