குர்கோன்: லாலுபிரசாத் – ராப்ரிதேவி தம்பதியின் ஆறாவது மகள் அனுஷ்கா ராவ், ஹரியானா மாநிலத்தில், தனது மாமனாருக்காக வாக்கு சேகரித்து வருகிறார்.

லாலு பிரசாத் யாதவின் மகன்களான தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் ஆகிய இருவரும் பீகார் மாநில அரசியலில் கோலோச்சும் அதேவேளையில், மூத்த மகள் மிசா பாரதியும் நாடாளுமன்ற தேர்தலில், பீகாரிலிருந்து போட்டியிடுகிறார் என்பது நாம் அறிந்ததே.

தற்போது, 6வது மகள் அனுஷ்கா ராவும் அரசியல் வளையத்திற்குள் வந்துள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹரியானா மாநில முன்னாள் மின்சார அமைச்சர் கேப்டன் அஜய் யாதவின் மகன் சிரஞ்சீவ் ராவ்தான் அனுஷ்காவின் கணவர். கேப்டன் அஜய் யாதவ், குர்கோன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களிலிருந்து, குர்கோன் பகுதியில் குடியேறிய சுமார் 1 லட்சம் வரையிலான வாக்காளர்கள் அங்கே வசிக்கின்றனர். எனவே, அவர்களுடைய வாக்குகளைக் கவர வேண்டி, அனுஷ்கா ராவ் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.