ராஞ்சி

லாலுவுக்கு உதவ அவருடைய உதவியாளர்கள் இருவர் சிறு குற்றம் செய்ததாக  சிறை தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளனர்.

கடந்த மாதம் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.    பிறகு அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   அவருக்கு உதவ அவருக்கு முன்பே அவருடைய உதவியாளர்கள் இருவர் அவருக்காக சிறையில் காத்திருந்த செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

லட்சுமண் மாதோ மற்றும் மதன் யாதவ் ஆகிய இருவரும் லாலுவின் நெருக்கமான உதவியாளர்கள் ஆவார்கள்.    மாதவ் யாதவின் பக்கத்து வீட்டுக்காரரான சுமித் யாதவ் இவர்கள் இருவர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.  அந்த புகாரில் அவர், “மதன் யாதவ் மற்றும் லட்சுமன் மாதோ இருவரும் இணைந்து என்னை அடித்து என்னிடம் இருந்து ரூ.10000 திருடி விட்டனர்.   இவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும்”  என தெரிவித்திருந்தார்.

ராஞ்சியில் உள்ள ஒரு காவல் நிலையம் இந்த புகாரை வாங்க மறுத்த நிலையில் சுமித் மற்றொரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   இந்த புகார் காவல் நிலையத்தில் பதிந்த உடனேயே இருவரும் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.    இருவரும் ராஞ்சி சிறையில் விசாரணைக்காக அடைக்கப் பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு 2013ஆம் வருடம் லாலு சிறையில் அடைக்கப் பட்ட நேரத்தில் இதே முறையில் மதன் யாதவ் அவருக்கு முன்பே சிறையில் காத்திருந்தார்.   அப்போது லாலுவுடன் ஜார்க்கண்ட் அரசு கூட்டணியில் இருந்ததால் லட்சுமண் நினைத்த போது எல்லாம் லாலுவையும் மதன் யாதவையும் சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.