லாலுவின் மகனை எதிர்த்து களம் காண்கிறாரா முன்னாள் மருமகள்..?

பாட்னா: இந்தாண்டின் இறுதியில், பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப்சிங்கை எதிர்த்து, அவரைப் பிரிந்த முன்னாள் மனைவி ஐஸ்வர்யா போட்டியிடவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

லாலு பிரசாத்தின் 7 மகள்களுக்கு திருமணமான பிறகு, அவரின் மூத்த மகன் தேஜ் பிரதாப்பிற்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், தம்பதிகள் சில மாதங்களிலேயே பிரிந்தனர்.

நிதிஷ் குமார் அமைச்சரவையில் சிறிதுகாலம் அமைச்சராக இருந்த தேஜ் பிரதாப், தற்போது மஹுவா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் இத்தேர்தலில் தொகுதி மாறி, ஹசன்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது பிரிந்த கணவரை எதிர்த்து, ஐஸ்வர்யா போட்டியிடவுள்ளார் என்ற தகவல் பரவி, பீகார் அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

“ஐஸ்வர்யா தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கமாட்டேன். அவர், எந்த தொகுதியில் களம் காணவுள்ளார் என்ற தகவல் விரைவில் தெரியவரும்” என்று பேசினார் அவரின் தந்தை சந்திரிகா ராய்.