அப்பா செய்த தப்புக்கு  மன்னிப்பு கேட்ட லாலு மகன்.

--

அப்பா செய்த தப்புக்கு  மன்னிப்பு கேட்ட லாலு மகன்.

பீகாரில் நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்காக, புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார், ஆர்.ஜே.டி.கட்சியின் முதல்வர் வேட்பாளரான ,தேஜஸ்வி யாதவ்.

அந்த ஆயுதம் –

மன்னிப்பு.

பீகார் மாநிலத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஆர்.ஜே.டி. கட்சி 15 ஆண்டுகள் தொடர்ச்சியாய் ஆட்சியில் இருந்தது.

அந்த கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் முதல் 7 ஆண்டுகளும், எஞ்சிய 8 ஆண்டுகள் அவர் மனைவி ராப்ரிதேவியும் முதல்வர்களாக இருந்தனர்.

இப்போது அங்கு  நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் அக்டோபர் மாதம் சட்டசபைத்  தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பாட்னாவில் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய லாலு-ராப்ரி தம்பதியின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ்’’ என் பெற்றோர்கள் ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று வருத்தம் தெரிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

‘’ எங்கள் கட்சி பீகாரில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சியில் எனக்குப் பங்கு இல்லை. அப்போது நான் சிறுவன். எங்கள் ஆட்சியில் தவறுகள் நடந்திருக்குமானால், அதற்காக உங்களிடம் ( மக்களிடம்” நான் மன்னிப்பு கேட்கிறேன்’’ என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இதனை ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

‘’ நடந்த  தவறுகளுக்கு லாலு அல்லவா மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று அந்த கட்சி கூறியுள்ளது.

 -பா.பாரதி