ரோம் :

த்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து, வெனிஸ் நகருக்கு அருகில் உள்ள பன்டோவா நகரில் இருக்கும் மருத்துவமனையில் அவருக்கான சிறுநீரகம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பன்டோவா நகருக்கும் ரோம் நகருக்கும் சுமார் 500 கி.மீ. தூரம் இருந்ததால், குறுகிய நேரத்தில் இதனை கொண்டுவருவதற்காக அந்நாட்டு போலீசாரின் உதவியை மருத்துவமனை நிர்வாகம் நாடியது.

மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்று, போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள லம்போர்கினி காரில் சிறுநீரகத்தை கொண்டு வந்தனர், சாதாரணமாக காரில் செல்ல 5 மணி நேரம் ஆகும் இந்த தூரத்தை, இந்த அதிநவீன சொகுசு காரில் 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கொண்டுவந்தனர்.

உறுப்பு தானத்தை ஊக்குவித்து வரும் இத்தாலி அரசு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படும் விதமாக உலகின் அதிக விலைமதிப்புள்ள கார் என்று கூறப்படும் லம்போர்கினி கார்களை போலீசாருக்கு வழங்கியுள்ளது, இந்த கார்களில் குளிர்பதனப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வகை லம்போர்கினி கார்கள் இந்திய மதிப்பில் சுமார் 3.75 கோடி ஆகும். இதுபோன்ற விலையுயர்ந்த அதிநவீன சொகுசு கார்களை இந்தியாவில் சூப்பர் ஸ்டார்கள் மட்டுமே வைத்திருக்கிறார்கள்.