Random image

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தலாம்: உயர்நீதி மன்றம் அனுமதி

சென்னை:

சென்னை, சேலம் இடையே அமைக்கப்பட உள்ள  8 வழி பசுமை எக்ஸ்பிரஸ் சாலைக்கு 5 மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம், இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது தடையை விலக்கி நிலம் கையப்படுத்தலாம் என்று கூறி உள்ளது.

சென்னை-சேலம் எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அவரகள் தாக்கல் செய்த மனுவில், ‘பொதுமக்களின் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு மத்திய அரசு “நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நிலம் கையகப் படுத்துதலில் வெளிப்படைத்தன்மை” சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக அறிவிப்பானை அரசிதழில் வெளியான 21 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது.

2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 105ன் படி, இந்த சட்டத்தின் அம்சங்கள் 13 பிற சட்டங்களுக்குப் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. அந்த 13 சட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 சட்டமும் ஒன்றாகும். இதனால் சமூக பொருளாதார தாக்க ஆய்வும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என ஆகிறது. இது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையை தடுப்பதாக உள்ளது.

எனவே 2013 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 105 மற்றும் தற்போது நடைபெற்று வரும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை சட்ட விரோதம் என அறிவித்து தடை விதிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணையை தொடர்ந்து மத்திய  மற்றும் மாநில அரசுகளை பதிலளிக்குமாறு நீதிமன்றம் கோரியிருந்தது. அதைத்தொடர்ந்து, இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 8 வழி சாலைக்கு எதிரான  பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனின் வழக்கை  தள்ளுபடி செய்வதாக கூறிய நீதிமன்றம், 8 வழிச்சாலைக்கு தேவையான  நிலம் கையப்படுத்தலாம் என்று உத்தரவிட்டது. மேலும்  அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்த கருத்து கேட்க தேவையில்லை என்ற  2013ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 105வது பிரிவு செல்லும் என்றும் கூறி உள்ளது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றைய உத்தரவு அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.