சென்னை:

நாடு முழுவதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கனிஷ்க் நகை நிறுவன முறைகேடு தொடர்பாக கனிஷ்க் நகை கடை உரிமையாளர் மீது சென்னையில் நில மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனிஷ்க் நகை கடை நிறுவனம் ரூ.824 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக ஸ்டேட் வங்கி சிபிஐ-ல் புகார் கூறியது. அதைத்தொடர்ந்து நேற்று கனிஷ்க் நிறுவனம் அமைந்துள்ள இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.

இந்நிலையில்,  நிலமோசடி தொடர்பாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரும், பணமோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவினரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கனிஷ்க் என்ற  தனியார் நகைக் கடை உரிமையாளர் புபேஷ்குமார் ஜெயின், நிறுவனத்திற்காக  ரூ.824 கோடி அளவுக்கு கடன் வாங்கி இருப்பதாகவும்,  வங்கிக் கணக்குகளில் இருப்பு இருப்பதாக போலியாக கணக்குகளை சமர்ப்பித்து, கனிஷ்க் நகை  நிறுவனம்  வங்கிகளிடம் இருந்து கோடி கணக்கில்  கடன் பெற்றதாகவும்,  சென்னை  ராஜாஜி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் மட்டும் கனிஷ்க் கோல்டு நிறுவனம் பெயரில் ரூ.175 கோடி அளவுக்குக் கடன் பெறப்பட்டிருப்பதாகவும்,   மேலும் பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்பட 14 வங்கிகளிடம் இருந்து ரூ.824 கோடியே 15 லட்ச ரூபாயை கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அந்த நிறுவனமோ, ஆண்டு நிதி அறிக்கையில் இருப்பு மற்றும் விற்பனை கணக்குகளை கூடுதலாக காண்பித்து முறைகேடாக வங்கிகளில் கடன் பெற்றது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ்குமார், அவரது மனைவியும் இயக்குநருமான நீதா ஜெயின், பங்குதாரர்களான தேஜ்ராஜ் அச்சா, அஜய் குமார், சுமித் கேடியா ஆகியோர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கனிஷ்க் நிறுவன அதிபரான பூபேஸ் குமாரும், அவரது மனைவியும் பெங்களூர் சிபிஐ அலுவல கத்தில் இன்று  விசாரணைக்கு ஆஜராகினர்.

இதற்கிடையில், , பூபேஷ் குமார் மற்றும் அவரது மனைவி நீதா ஜெயின் மீது, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் நிலமோசடி வழக்கு ஒன்றை ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் புகழேந்தி என்பவர், பூந்தமல்லியில் உள்ள தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை பூபேஷ்குமாருக்கு விற்பதற்கு ஒப்பந்தம்போட்டுள்ளார். ஆனால் பணம் கொடுத்து நிலத்தை உரிமை யாக்கிக் கொள்வதற்கு முன்பாகவே, பூபேஷ் குமார் போலியாக ஆவணங்களை தயார் செய்து, எஸ்பிஐ வங்கியில் நிலத்தை ஈடாகக் காட்டி 42 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், மத்தியக் குற்றப்பிரிவின் நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசார் பூபேஷ், அவரது மனைவி நீதா ஜெயின் மற்றும் கனிஷ்க் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, சிபிஐ பதிவு செய்துள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கின் அடிப்படையில், பூபேஷ் குமார் மீது அமலாக்கத்துறையும் பண மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.