கருணாநிதியுடன் மகள் செல்வி

டில்லி,

நில மோசடி செய்ததாக, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மீது வழக்கு தொடர கோரி மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், வழக்குப் பதிந்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த  வி. நெடுமாறன் என்பவர் சென்னை  உயர் நீதிமன்றத்தில்,  திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் வி.எம். ஜோதிமணி ஆகியோர் மீது நில மோசடி செய்ததாக வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கில் சுப்ரீம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

வழக்கு விவரம்:

சென்னையை சேர்ந்த வி.நெடுமாறன் என்பவர், தன்னிடம் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, தாழம்பூர் கிராமத்தில் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் மிதிப்புள்ள  2.94 ஏக்கர் நிலத்தை தனக்கு விற்பதாக கூறி,  ரூ. 3.5 கோடியை முன்பணமாகப் பெற்றதாகவும், ஆனால் தனக்கு நிலத்தை விற்கவிலலை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், பணத்தை திருப்பி கேட்டபோது, தர மறுத்த அவர்கள் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே பூந்தமல்லி முதலாவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என  சென்னை ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதங்களுக்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று 2015ம் ஆண்டு  பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட்டது.

ஆனால், செல்வி தரப்பில் இருந்து, தன்மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும்  செல்வி தரப்பில் இருந்து  மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் நீதிபதி சிடி செல்வம்,  வழக்கில் இருந்து செல்வியை விடுவித்து உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டது.

அதில்,  வழக்கில் இருந்து கருணாநிதி மகள் செல்வியை விடுவித்தது செல்லாது என்று கூறிய நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்தனர்.

மேலும் செல்வி மீது வழக்குப் பதிவு செய்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. 

இதன் காரணமாக கருணாநிதி குடும்பத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.