மனைவி  பிறந்த நாளுக்காக, கடைகளுக்கு வாடகை ரத்து

இந்த கொரோனா ஊரடங்கின் போது தேவையிலுள்ளோரை தேடி அறிந்து உணவு அளித்தவர்கள், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியோர், மருந்து பொருட்கள் விநியோகித்தவர்கள் என்று எத்தனையோ நல்ல உள்ளங்களைப் பற்றி அறிந்தோம்.

அதே போன்று,   தன் மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு வருவாய் ஏதுமின்றி தவித்த கடைக்காரர்களுக்கு ஒரு மாத வாடகையைக் கடைகளின் உரிமையாளர் தள்ளுபடி செய்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த மாதவரம், நேரு தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை.  இவருக்குச் சொந்தமான 14 கடைகள் மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே அமைந்துள்ளன. அவற்றில் கடை வைத்திருப்போர் ஊரடங்கு காரணமாக, வருவாய் இன்றி பாதிக்கப்பட்டு வாடகை கூட தர முடியாத நிலையில் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதையறிந்த கடைகளின் உரிமையாளர் ஏழுமலை கடைக்காரர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய நினைத்தார்.

இந்நிலையில், தன் மனைவி பரமேஸ்வரியின், 49-வது பிறந்தநாள் வந்தது.  அதையொட்டி, இந்த 14 கடைகளுக்குமான ஒரு மாத வாடகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார் ஏழுமலை.  இக்கடைகளுக்கான ஒரு மாத வாடகை தொகை மொத்தம் ரூ. 99,150- ஆகும்.

கொரோனா காலத்தில் தன்னாலான உதவியினை பிறருக்குச் செய்யும் நோக்கத்தில் தான் வாடகை வேண்டாம் என கூறி விட்டதாக ஏழுமலை தெரிவித்துள்ளார்.

– லெட்சுமி பிரியா