லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் நாசியா கான். இவர் கடந்த மாதம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் வீரதீர செயல் புரிந்தமைக்கான விருதை பெற்றார். இவரை நில மாஃபியா கும்பல் தாக்கியுள்ளது.

தாஜ்கஞ் பகுதியில் நாசியா கானுக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக சிலர் ஆக்ரமித்துள்ளனர். இது குறித்து நிசாம் மாவட்ட கூடுதல் கலெக்டரிடம் புகார் அளித்தார். இதையடுத்து கூடுதல் கலெக்டர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாசியா கான் தனது நிலத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்த கும்பல் அவரை சராமரியாக தாக்கியது.

அவருடன் சென்ற சகோதரான ராஜாவையும் அந்த கும்பல் இரும்பு கம்பியால் அடித்து உதைத்தனர். இருவரும் காயமடைந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

‘‘நிலத்தை ஆக்ரமித்தாக கூறப்படும் கிர்பல் வர்மா கட்டடம் கட்ட கூடுதல் கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். இந்த நில விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் உள்ளூர் நிர்வாகம் எப்படி அனுமதி வழங்கலாம்’’ என்று நாசியா கான் சகோதரர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது நாடெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் வீரதீர செயலுக்கான விருது பெற்ற ஒரு பெண்ணையே உத்தரபிரதேசத்தில் நில மாஃபியா கும்பல் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.