சென்னை:
 தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணம் 40 மடங்கு வரை உயர்த்தி  தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட் டுள்ளது

நில அளவை, உட்பிரிவு செய்தல், எல்லை வரைபட பிரதிகள் பெறுவது தொடர்பான, 14 வகை கட்டணங்களை உயர்த்தி, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் எபதிவுத்துறை செயலாளர்  அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,
எப்.எம்.பி., எனப்படும், புலப்பட புத்தக பிரதியில், ஒரு பக்கத்துக்கு, 20 ரூபாய் என்று இருந்த கட்டணம், 50 மற்றும் 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நிலத்தின் பக்க எல்லைகளை சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கோணமானி வைத்து, நிலத்தின் பக்க எல்லைகளை அளந்து காட்டுவதற்கான கட்டணம், 30 ரூபாயில் இருந்து, 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டில், ஒரு பக்க எல்லைக்கான கட்டணம், 50 ரூபாயாக இருந்தது; 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
உட்பிரிவு, பாகப் பிரிவினைக்கு முன், நில அளவை செய்வதற்கான புதிய கட்டணம், புன்செய் நிலத்துக்கு, 1,000 ரூபாயாகவும், நன்செய் நிலத்துக்கு, 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம், கிராமப்புறம், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் முறையே, 400, 500, 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது, 85 ரூபாயாக உள்ள கிராம வரைபட பிரதி கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.