புதுடெல்லி: பாரதீய ஜனதா கட்சி, தனது தேசிய தலைமை அலுவலக விரிவாக்கத்திற்காக, டெல்லியின் தீன்தயாள் உபாத்யாயா சாலையில் கூடுதலாக 2 ஏக்கர் நிலத்தைப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, நிலப் பயன்பாட்டு விதிமுறையில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் தீன்தயாள் சாலையின் 6-A என்ற எண்ணில் உள்ளது. அதேசமயம், புதிதாகப் பெறப்பட்டுள்ள 8860 சதுர மீட்டர் அல்லது 2.189 ஏக்கர் நிலம், அதே சாலையின் 3-B என்ற எண்ணில் உள்ளது.

‘டெல்லி-2021’ க்கான பெருந்திட்டப்படி, அந்த குறிப்பிட்ட நிலப்பகுதி வசிப்பிட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டதாகும். ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இடப்பயன்பாடு மாற்றத்தின்படி, அந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதியானது, முழு பொதுப்பயன்பாடு மற்றும் பாதியளவு பொதுப்பயன்பாடு ஆகிய நோக்கத்திற்காக மாற்றப்பட்டுள்ளது.

இது‍தொடர்பாக டெல்லி மேம்பாட்டு ஆணையத்திடம் தடையில்லா சான்று கோரப்பட்டிருந்தது. அதன்படி, தடையில்லா சான்றிதழ் கிடைத்தவுடன் இந்த இடம், பாரதீய ஜனதாக் கட்சியின் அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.