நேபாளத்தில் நிலச்சரிவு இந்தியர் உள்பட 10 பேர் உயிரிழப்பு

காத்மண்டு:

நேபாள நாட்டின் மத்திய பகுதியில் அமைந்து சிந்துபால்சோக் மாவட்டத்தின் மேலம்சி நகரில் கட்டுமான பணி ஒன்று நடந்து வந்துள்ளது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து உள்ளனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் அவர்களது இருப்பிடம் மண்ணில் புதைந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ பகுதியில் சிக்கியிருந்த ஒருவரை காயங்களுடன் மீட்டனர். இதன்பின் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களில் ராஜேந்திர சவுராசியா (வயது 42) என்ற இந்தியரும் அடங்குவார்.

இது தவிர்த்து காயமடைந்த நபர் பாரு ஷா (வயது 35) என்ற இந்தியர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மே மாத மத்தியில் இருந்து பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 177 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.