மண் சரிவு: ஊட்டி மலை ரயில் நடு வழியில் நிறுத்தம்… பயணிகள் அவதி

கோவை:

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் விட்டுவிட்டு பெய்து வரும் மழை காரணமாக மேட்டூப்பாளையம் ஊட்டி இடையே பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்ற மலை ரயில் நடுவழியில் சிக்கி உள்ளது. அதில் பயணம் செய்யும் பயணிகள்  செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

கோவை அருகே உளள மேட்டுப்பாளையத்தில் இருந்து  சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் பாரம்பரியம் மிக்க மலை ரயில் இயக்கப்படுகிறது.

இந்த மலை ரயிலில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் இயக்கப்படும் நீராவி இன்ஜின் பொருத்தப்பட்டு பல் சக்கரத்தில் இயங்கும். இந்த  மலை ரயிலில் பயணிக்கவே உலகம் முழுவதும் இருந்து சுற்றுப்பயணிகள் குவிந்து வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் இந்த மலை ரயிலுக்கு தனி மவுசு உண்டு.

இநத நிலையில், இன்று காலை மேட்டூப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மலைரெயில், மண் சரிவு காரணமாக நடுவழியில் சிக்கிக்கொண்டது.  மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான ரயில் பாதையில் குறைந்தது 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக, கல்லாறு-குன்னூர் இடையே ஏற்பட்ட மண்சரிவால் இந்த மலை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.  திலுள்ள சுமார் 200 பயணிகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மண்சரிவு சரிசெய்யப்பட்ட பின், ரயில் சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண் சரிவை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.