5வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக்: விண்ணை நோக்கி செல்லும் விலைவாசி

சென்னை:

5வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக் காரணமாக  தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 3ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் கடந்த 20ந் தேதி தொடங்கி இன்று 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் சரக்குகள் தேங்கம் அடைந்து விலைவாசி தாறுமாறாக உயரத்தொடங்கி உள்ளது.

இந்த ஸ்டிரைக்கில் நாடு முழுவதும் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இந்த தொழிலை நம்பியுள்ள 50 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை விண்ணை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது..

தமிழகத்தின் பிரதான மார்க்கெட்டான கோயம்பேடு சந்தைக்கு லாரிகள் வராததால், காய்கறிகள், மளிகை பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மேலும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இதே  நிலை நீடித்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த  4 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 4, 500 கோடி மதிப்புள்ள சரக்கு பரிமாற்றம் தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்து உள்ளது.

ஜவுளிகள் தேக்கம்:

தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள்,  ராணுவ வாகனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், ரிக் வண்டிகளில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், அனல் மின்சாரம் தயாரிக்க தேவையான இரும்பு உபகரணங்கள் உள்பட பல்வேறு பணிகளும் தடைபட்டுள்ளது.

சேலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவ்வரிசி மாவு, ஸ்டீல் பொருட்கள் மற்றும் கொலுசு உள்பட ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கி உள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு தினமும் 1 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு வருகிறது

ஜவுளிகள் உள்பட பொருட்கள் தேக்கம் அடைய தொடங்கி உள்ளது. ஈரோடு பகுதியில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்படும் ஜவுளிகள் தேக்கம் அடைந்து கோடிக்கணக்கனா ரூபாய் வர்த்தகம் முடங்கி உள்ளது.

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயம், பருப்பு உள்பட அத்தியாவசிய பொருட்கள் தடைபட்டுள்ளது.

20 லட்சம் கறிக்கோழிகள் தேக்கம்:

லாரி ஸ்டிரைக்கால் கறிக்கோழிகள் 50 சதவீதம் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. . தமிழகத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து வாரம் ஒன்றுக்கு சுமார் 70 லட்சம் கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பட்டு வருகின்றன. இவற்றில்,  இதில் 30 லட்சம் கறிக்கோழிகள் கேரளாவுக்கும், 40 லட்சம் கறிக்கோழிகள் தமிழகத்திலும் விற்பனையாகின்றன.

கடந்த 4 நாட்களாக தொடரும் லாரி ஸ்டிரைக் காரணமாக, கறிக்கோழிகள் அனுப்ப முடியாமல் அல்லல் பட்டு வருகின்றனர்.  கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 20 லட்சத்திற்கும் மேலான கறிக்கோழிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.

காய்கறிகள் அழுகும் நிலை:

லாரி ஸ்டிரைக் காரணமாக  கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பப்படும் சுமார் 2 கோடி மதிப்பிலான  உருளைக்கிழங்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு மேட்டுப்பாளையம் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், வர்த்தகம் பாதிக்கப்படுவதுடன், காய்கறி விலையும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே  நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, தண்ணீர் தேங்கி, கேரட், முள்ளங்கி, பீட்ருட், பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற காய்கறி பயிர்கள் மழையில் சேதமமடைந்து அழுகி வரும் நிலையில், லாரி ஸடிரைக்  காரணமாக விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

ரூ.25 கோடி தேயிலை தேக்கம்:

நீலகிரி மாவட்டத்தின் முதுகெலும்பாக விளங்கி வரும் தேயிலையை  விற்பனைக்கு அனுப்ப முடியாததால், செய்வதறியாது திகைத்துள்ளனர் விவசாயிகள். கடந்த 4 நாட்ளாக  லாரிகள் ஓடாததால் 25 கோடி மதிப்பிலான தேயிலைத்துாள் குடோன்களிலும், தனியார் தேயிலை தொழிற்சாலைகளிலும் தேக்கமடைந்துள்ளது.

ரெயில்நிலையங்களில் சரக்குகள் தேக்கம்:

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மார்க்கெட்களுக்கு செல்லும் காய்கறிகள், மளிகை பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்  முடங்கி உள்ளது. ஒருசில வியாபாரிகள் ரெயில்கள் மூலம் சரக்குகளை கொண்டு வந்தாலும், அதை ரெயில் நிலையத்தில் இருந்து மார்க்கெட்டுக்கு எடுத்துச்செல்ல லாரிகள் இல்லாததால், ரெயில்கள் மூலம் எடுத்து வரப்படும் பொருட்கள் கூட் ஷெட்களிலேயே தேங்கி உள்ளது.

சத்துணவுக்கு முட்டை கிடைக்குமா?

நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் 3 கோடி முட்டைகள் லாரிகளில் ஏற்று மதி செய்யப்படுகிறது. இதில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு 50 லட்சம் முட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவும் தற்போது தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு இரண்டரை கோடி முட்டைகள் தேங்கும் சூழல் உருவாகி உள்ளது.

லாரி ஸ்டிரைக் தொடர்ந்தால், சத்துணவுக்கு முட்டை கிடைப்பதிலும் பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகும்.

கட்டுமானம் பாதிப்பு:

லாரிகள் ஸ்டிரைக்கில் மணல் லாரி உரிமையாளர் சங்கமும் இணைந்துள்ளதால், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.  இதனால் கட்டுமாண பணிகளுக்கு மணல், செங்கல், ஜல்லி சிமெண்ட் போன்ற அத்தியாவசிய பொருட்கள்  கிடைக்காமல் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் உடனே தலையிட்டு, லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.