காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் பலி

ஸ்ரீநகர்:

தெற்கு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் போலீஸ் படையை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி பெரோஸ் உள்பட 6 போலீசார் உயிரிழந்தனர்.

kashmir

பல போலீசார் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட அவர்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள். இதற்கிடையே அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது இன்று தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் லஷ்கர் -இ- தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இத்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.

காஷ்மீரின் பிஜ்பெகாரா பகுதியில் அர்மானி கிராமத்தில் உள்ள வீட்டில் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் பாதுகாப்பு படைகள் அப்பகுதியை முற்றுகையிட்டன.

ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இணைந்து பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதியினை இன்று காலை சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்பு இடையே சண்டை தொடங்கி மாலை வரை நீடித்தது.

இந்த சண்டையில் லஷ்கர்- இ- தொய்பா கமாண்டர் ஜுனைத் மாட்டோ உள்பட இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இன்னும் சண்டை தொடர்ந்து வருகிறது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இப்போது அந்த இயக்கம் தாக்குதல் நடத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.