ஜம்முகாஷ்மீரில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய பாதுகாப்பு படை! சிக்கிய லஷ்கர் தீவிரவாதி!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி பிடிபட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து செய்யப் பட்டது. இதையடுத்து, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், ஜம்மு காஷ்மீரில் பதற்ற நிலையே காணப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் உள்ளனர்.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. இதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, அந்நாட்டு ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தொடர் தாக்குதலைகளை நடத்தினர்.

இதையடுத்து, எல்லை பகுதிகளில் தீவிரவாத ஊடுருவல் தவிர்க்க தீவிர கண்காணிப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 29ம் தேதி குல்காம் மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குல்காம் மாவட்டத்தில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றன. முக்கிய நகரங்களில், பாதுகாப்பு படையினரின் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையயே, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோபூர் பகுதியில், அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் தனிஷ் சன்னா என்பதாகும். பாராமுல்லா பகுதியைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். அவர் கடந்த 15 நாட்களாக சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி வந்ததாக போலீசார் கூறியிருக்கின்றனர்.

ஹந்துவரா பகுதியை ஒட்டிய மகம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் சில வாரங்களுக்கு முன்பு ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

 

You may have missed