22 ஆண்டுகளாக அமேசான் காட்டில் தனியாக வாழ்ந்து வரும் மனிதர்

அமேசான் காட்டுப்பகுதியில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக யாருடைய உதவியும் இல்லாமல் தனி மனிதராக ஒருவர் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் பிரேசில் அரசின் ஃபுனாய் அமைப்பு வெளியிட்டுள்ள காணொளி காட்சியில் பழங்குடியின மனிதர் ஒருவர் அமேசான் காட்டில் வாழ்ந்து வருவது நிரூபணமாகியுள்ளது.

amazon-man

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டு பகுதிகளில் வாழ்ந்த பழங்குயிடியின மக்கள் பெரும்பாலும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அழிக்கப்பட்டுள்ளனர். மனிதர்கள் செல்ல அஞ்சும் காட்டுப்பகுதியில் யாரவது வசிக்கின்றனரா என்பதை ஆய்வு செய்ய ஃபுனாய் குழு முயன்றது.

ஏறத்தாழ 4000 ஹெக்டே பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் தனிமனிதர் ஒருவர் வசிப்பதை இந்த குழு கண்டறிந்தது. அவரின் பாதுகாப்பு நலன் கருதி அந்த பகுதிக்கு மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. யாரும் காட்டிற்குள் சென்று அவருக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும், முழு தகவல்களையும் அறியும் பொருட்டு ஃபுனாய் குழு 1996ம் ஆண்டில் இருந்து அந்த பழன்குடியிடியின மனிதரை பின் தொடர்ந்து ஒரு காணொளி காட்சியை வெளியிட்டுள்ளது. அவருக்கு பாதுகாப்பு அளிக்கவும், அந்த பகுதியில் மற்றவர்களால் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த காணொளி காட்சியை புனாய் பதிவு செய்தது.

amazon

இது குறித்து பழங்குடிகள் நல்வாழ்வுக்காக பணி செய்யும் சர்வைவல் இன்டர்நேஷனல் எனும் அரசு சாரா அமைப்பை சேர்ந்த ஃப்யோனா வாட்சன் கூறுகையில், “இந்த மனிதன் உயிரோடு இருக்கிறார் என்று அவர்கள் தொடர்ந்து நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்.

மேலும் அவர், இந்த காணொளியை இப்போது வெளியிடுவதற்கு பின்னால் அரசியல் நோக்கமும் இருக்கிறது என்கிறார். மண்ணின் மக்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அவரின் இருப்பு குறித்து சொல்வது முக்கியமானதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போது அவர் வசித்து வரும் இடங்களில் ஆறு பழங்குடியின மக்கள் வசித்து வந்துள்ளனர். 1970ல் இருந்து 1980 வரையிலான காலங்களில் வனப்பகுதியில் சாலை அமைக்கவும், மரங்களை வெட்டி வியாபாரம் செய்யும் நோக்கிலும் நடத்தப்பட்ட தாக்குல்களில் அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்கள் அழிக்கப்பட்டனர். அவர்களில் எஞ்சியிருப்பது இந்த மனிதர் மட்டுமே.

amazone

காணொளியின் குறிப்பிடப்படும் பழங்குடியின மனிதரின் வாழ்க்கை முறை:

அவரே அனைத்துக்கும் ஆதரமாக விளங்குகிறார். வெளியுலக மனிதர்களின் தொடர்பு இல்லாமல் இந்த மனிதர் மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார். காட்டுப்பகுதியில் வசித்து வந்த பழங்குடி இனக்குழுவுக்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்பதும் இதுவரை தெளிவாக யாருக்கும் தெரியவில்லை.

கடந்த காலங்களில் வைக்கோலால் வேயப்பட்ட வீட்டில் அவர் வசித்திருக்கிறார். அவர் சோளம் மற்றும் பப்பாளியை பயிரிட்டு வருகிறார். கைகளால் செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருக்கிறார். வெளியுலக மக்களின் உறவை அவர் விரும்பவில்லை, ஏனெனில் அவர் எதிர்கொண்ட தாக்குதல்களை இந்நிலைக்கு அவரை வாழ வைத்துள்ளது.

amazon-man-home

ஒரு இனத்தின் அழிவையும், வாழ்வாதாரத்தை வெளிஉலகிற்கு கூறும் பொருட்டு ஃபுனாய் அமைப்பு மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது அவர்களுடன் சென்ற திரைப்பட இயக்குனர் அந்த பழங்குடியினரின் உருவத்தை புகைப்படமாக எடுத்துள்ளார்.

“வன்முறை நிறைந்த அனுபவத்தைதான் அவர் எதிர் கொண்டு இருக்கிறார். அவரை பொருத்த வரை இவ்வுலகம் மிக அபாயகரமானது.” என்கிறார் ஃயோனா வாட்சன். அந்த பழங்குடி வாழ்ந்த பகுதியையும், அவரின் வசிப்பிடத்தையும் பார்வையிட்டப்பின் வாட்சன் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இந்த காணொளி துயர்மிகுந்த ஒன்றாக இருந்தாலும், அவரை பாதுகாக்க இது தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

“அவரை பற்றி தெரிந்துக் கொள்ள தேவை எதுவும் இல்லாமல் நமக்கு இருக்கலாம். ஆனால், உலக அளவில் மனித பன்முகதன்மையை நாம் இழந்து வருகிறோம் என்தற்கான சான்று இந்த பழங்குடியின மனிதரின் வாழ்க்கை” என்று வாட்சன் குறிப்பிடுகிறார்.