சென்னை

ட்சுமி விலாஸ் வங்கிக்கு இயக்கத்தடை விதிக்கப்படுவதற்கு சில காலம் முன்பு பாஜக ராஜீவ் சந்திரசேகரின் ஜூபிடர் கேபிடல் நிறுவனம் தன்னிடம் உள்ள பங்குகளை விற்றுள்ளது.

சென்னையைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கியில் வாராக்கடன் 26%க்கும் அதிகமானதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.  இதையொட்டி ரிசர்வ் வங்கி இந்த வங்கிக்குப் பெரிய தொகை கடன் அளிக்கத் தடை விதித்தது.    ஆயினும் கடன்கள் வசூல் ஆகாததால் வங்கி மேலும் நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டது.  இதையொட்டி தற்போது லட்சுமி விலாஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி இயக்கத் தடை விதித்துள்ளது.

வங்கியின் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கணக்கில் இருந்தும் ரூ.25000க்கு மேல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   மேலும் வங்கியில் கடன்கள் வழங்குவதும் முதலீட்டை பெறுவதும் அறவே தடை செய்யப்பட்டுள்ளது.    இதனால் இந்த வங்கியின் பங்குகளை வைத்திருப்போர் அதை வேறு யாருக்கும் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   இவ்வாறு சுமார் 98000 பங்குதாரர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜீவ் சந்திரசேகர்

ஆனால் இந்த சிக்கலில் இருந்து பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான ராஜீவ் சந்திரசேகரின் நிதி நிறுவனமான ஜூபிடர் கேபிடல் நிறுவனம் சமீபத்தில் வெளியில் வந்துள்ளது.  ஜூபிடர் கேபிடல் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு லட்சுமி விலாஸ் வங்கி பங்குதாரராக நுழைந்தது.  அப்போது ஒரு பங்கு விலை ரூ. 70 என 30 லட்சம் பங்குகளை வாங்கி 1.7% பங்குதாரராக ஆனது.  அடுத்த 4-5 வருடங்களில் மேலும் பங்குகளை வாங்கி குவித்த ஜூபிடர் கேபிடல் நிறுவனம் 2.23% பங்குதாரர் ஆகியது.

இந்த வங்கியின் பங்குகள் விலை ரூ.20.9.80 ஆக 2017ஆம் வருடம் உயர்ந்தது.  அப்பொழுது ஒரு சில பங்குகளை ஜூபிடர் கேபிடல் விற்ற போதிலும் முழுமையாக வெளியேறவில்லை.  அடுத்த ஆறு மாதங்களில் இந்த பங்குகள் விலை ரூ.20 ஆனது.  கடந்த 1926 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் தனியார் வங்கி என்பதால் முதலீட்டாளர்கள் விலகாமல் இருந்தனர்.

இந்நிலையில் 2020 ஆம் வருடம் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஜூபிடர் கேபிடல் தனது பங்குகளை வேகமாக விற்றுள்ளது.   தற்போது லட்சுமி விலாஸ் வங்கியின் மிகக் குறைந்த அளவு பங்குகளே ஜூபிடர் கேபிடல் நிறுவனத்திடம் உள்ளது.   ரிசர்வ் வங்கி இயக்கத் தடை விதிக்கும் நேரத்தில் தனது பங்குகளை பாஜக மாநிலங்களவை உறுப்பினரின் நிறுவனம் வேகமாக விற்பனை செய்தது மக்கள் மனதில் சந்தேகத்தை எழுப்பி உள்ளது.   இது குறித்து ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.