உடைபடுமா? உயிர் பெறுமா? ஐ.என்.எஸ். விராத் கப்பலை  ’’காப்பாற்ற’’ கடைசிக் கட்ட முயற்சி..
ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்த ஐ.என்.எஸ்.விராத் கப்பலை, பின்னர் இந்தியா விலைக்கு வாங்கி, தனது கடற்படையில் சேர்த்துக்கொண்டது.
ஓடியாடி உழைத்து வரலாறு படைத்த ஐ.என்.எஸ். விராத் கப்பலுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு அளிக்கப்பட்டது.
அந்த கப்பலை ’அருங்காட்சியமாக’’ மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறாததால், உடைப்பதற்காக அந்த கப்பல் ஏலம் விடப்பட்டது.
குஜராத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராம் குரூப் நிறுவனம், , ஐ.என்.எஸ்.. கப்பலை சுமார் 38 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
 மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ். கப்பல், குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஆலங் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு உடைப்பதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த கப்பலைக் காப்பாற்றக் கடைசிக் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மும்பையில் உள்ள ‘’ ENVITECH MARINE CONSULTANTS PVT LTD’’ என்ற கம்பெனி, ஐ.என்.எஸ். கப்பலை விலைக்கு வாங்கி , கோவா கடல் பகுதியில் ’’அருங்காட்சியகம்’’ போல் நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.தங்கள் கடல் பகுதியில் கப்பலை நிறுத்த கோவா மாநில அரசு சம்மதம் தெரிவித்து விட்டது.
இதையடுத்து , ஸ்ரீ ராம் குழுமத்திடம், மும்பை நிறுவன அதிகாரிகள் நேரில் சென்று, கப்பலை தாங்கள் விலைக்கு வாங்கிக் கொள்வதாக உறுதி அளித்தனர்.
இப்போது கப்பலின் ’’உயிர்நாடி’’ ஸ்ரீ ராம் குழுமத்திடம் உள்ளது.
அந்த குழுமத் தலைவர் முகேஷ் பட்டேல் என்ன சொல்கிறார்?
‘’மும்பை நிறுவனம் எங்களுடன் பேச்சு நடத்தியது உண்மை தான். நானும் தேச பக்தன் தான். கப்பலை விற்கத் தயார். 120 கோடி ரூபாய் முதலில் கேட்டோம். மீண்டும் கப்பலை மும்பை கொண்டு சென்று, பிறகு கோவாவுக்குக் கொண்டு செல்ல வேண்டும், அதற்குச் செலவு பிடிக்கும்.அதனால் கப்பலுக்கு விலையாக நூறு கோடி ரூபாய் கேட்டுள்ளோம். இது தவிர மத்திய அரசிடம் இருந்து தடை இல்லா சான்று ( என்.ஓ.சி) வாங்கி வர வேண்டும்.
எனது வங்கிக் கணக்கில் நூறு கோடி ரூபாயை மும்பை நிறுவனம் செலுத்தி விட்டு என்.ஓ.சி. சான்றும் வாங்கி தந்து விட்டால்,ஐ.என்.எஸ். கப்பலை, மும்பை கம்பெனிக்கு கொடுக்க தயார்’’ என்கிறார்,  ஸ்ரீ ராம் குழு தலைவர்.
-பா.பாரதி.