டில்லி

டந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று வரை இந்தியாவில் 1,06,77,710 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,03,45,278 பேர் குணம் அடைந்து தற்போது 1,74,351 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த வருடம் ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வாரம் கொரோனா பாதிப்பு முதல் முறையாக 1 லட்சத்துக்கும் கீழே இறங்கி உள்ளது.   கடந்த வாரம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,100 பேர் ஆவார்கள்.   சுமார் 4 மாதம் முன்பு ஒரே நாளில் இத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர்.   மொத்த எண்ணிக்கையில் தென் இந்தியாவில் கேரள மாநிலத்தில் 40% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  முதல் 5 நாட்களில் 7,86,842 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.  இதில் கர்நாடகாவில் 16%, ஆந்திராவில் 15%, தெலுங்கானாவில் 11%, ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 6% எனத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.   கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரள மாநிலத்தில் 24000 ஊசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன..