கடந்த வருடம் மிகக் குறைவாக ரெயில் தடம் அமைத்த மோடி அரசு

--

டில்லி

மோடி அரசு பதவிக்கு வந்த 4 ஆண்டுகளில் சென்ற ஆண்டு மிகக் குறைவாக ரெயில்வே தடன் அமைக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே தடங்களில் தினம் தோறும் பல ரெயில்கள் பயணிக்கின்றன.   அதனால் அந்த தடங்களின் ஆயுட்காலம் குறைந்து வருகின்றன.  அதை ஒட்டி வருடா வருடம் புதிய ரெயில்வே தடம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.   ஒவ்வொரு வருடமும் அதற்காக ஒரு இலக்கு நிர்ணயிக்கப் படுகிறது.   அந்த வருட முடிவுக்குப் பின் அமைக்கப்பட்டுள்ள தடத்தின் தூரமும் இலக்கும் ஆராயப்படுகிறது.

அதன்படி சென்ற கணக்கு வருடமான 2016-17 ஆம் வருடம் 953 கிமீ தூரம் புதிய தடம் அமைக்கப்பட்டிருந்தது.  ஆனால் 2017-18ஆம் வருடம் வெறும் 409 கிமீ தூரம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.   அது மட்டும் இன்றி மீட்டர் கேஜில் இருந்து பிராட் கேஜாக மாற்றப்பட உள்ள பணிகள் இருமடங்கு குறைந்துள்ளன.   இதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ரெயில்வேத்துறையின் உட்கட்டமைப்புக்கு பயன்படுத்தப் பட்டதாக கூறப்படுகிறது.

மோடி அரசு பதவிக்கு வந்த 4 ஆண்டுகளில் இது மிகவும் குறைவான தூரம் என சொல்லப்படுகிறது.

இது குறித்து ரெயில்வே ரெயில்வே ஆணைய தலைவர் விவேக் சகாய், “அகலப் பாதை மாற்றும் திட்டத்தில் சற்றே தொய்வு ஏற்பட்டுள்ளது.  ஏனெனில் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் புதிய தடம் அமைக்கவும்  ரெயில்வே லைன்களை அதிகரிக்கவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.    அத்துடன் ரெயில்வே உட்கட்டமைப்புக்கும் நிதி தேவைப்பட்டதால் இந்த நிதி ஆதாரம் அதற்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.