திடீர் உடல்நலக் குறைபாடு – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர்

மும்பை: புகழ்பெற்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு தற்போது வயது 90. இவர் மொத்தம் 36 மொழிகளில் பல்லாயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், தேசிய விருதுகள் மற்றும் மாநில விருதுகள் என்று கவுரவத்தை அள்ளிக் குவித்தவர்.

இவர் பாடகியாக மட்டுமல்லாது, இசையமைப்பாளர் மற்றும் படத் தயாரிப்பாளர் என்ற பணிகளையும் ஏற்றவர். புலவாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்கள் குடும்பத்திற்கு தாராளமாக நிதியுதவியும் வழங்கினார். மராட்டிய அரசு இவரின் பெயரில் இசைப் பள்ளியையும் நிறுவியுள்ளது.

மும்பையில் வசித்துவரும் இவருக்கு நள்ளிரவில் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர்ந்த கண்காணிப்பில் உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் விரைவில் பூரண நலம்பெற்று வர வேண்டுமென இவரின் லட்சோபலட்சம் ரசிகர்கள் பதைபதைப்புடன் உள்ளனர்.

You may have missed