மறைந்த ராஜீவ்காந்தி இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்த 13வது சட்ட திருத்தம்: ரத்து செய்ய முயற்சி செய்யும் இலங்கை அரசு

கொழும்பு: மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்த 13வது சட்ட திருத்தத்தை,   ரத்து செய்ய, தற்போதைய இலங்கை அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்திய அரசு இதில் தலையிட்டு, இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய ராஜபக்சே அரசு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதால், தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இது  இலங்கையில் வாழும் தமிழர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த பொதுத் தேர்தலில் ராஜபக்சே சகோதரர்கள் வெற்றி பெற்ற பின், இலங்கையின் 2 முக்கிய சட்டங்கள் மீது வெளிச்சம் விழுந்துள்ளது. ஒன்று, நாடாளுமன்றம் மற்றும் சுதந்திர ஆணையங்களை வலுப்படுத்தும் நோக்கில், அதிபரின் அதிகாரங்களை குறைத்த 19 ஆவது சட்ட திருத்தம். ராஜபக்சே அரசு ஏற்கனவே இந்த சட்டத்தில் 20ஆவது  திருத்தம் செய்ததோடு, அரசிதழிலும் வெளியிட்டது. இரண்டாவது, கடந்த 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, 9 மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் 13 ஆவது சட்டதிருத்தம்.

13 ஆவது சட்ட திருத்தம் என்ன சொல்கிறது?

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலும், இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகை யிலும், கடந்த 1987 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனேவும் இந்திய-இலங்கை உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.  தமிழர்கள் பகுதியில் மாகாணசபை அமைப்பதற்கும், சிங்கள மாகாணசபை உள்ளிட்ட 9 மாகாணசபைகளுக்கு சுயாட்சி வழங்கவும் இந்த சட்டம் வழி வகை செய்கிறது.

கல்வி, சுகாதாரம், விவசாயம், வீட்டு வசதி, நிலம் மற்றும் காவல் துறை ஆகியவை மாகாண நிர்வாகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால், நிதி அதிகாரங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அதிபருக்கு வழங்கப்பட்ட உச்சபட்ச அதிகாரம் ஆகியவற்றால், மாகாணசபை நிர்வாகங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறவில்லை. குறிப்பாக, காவல் துறை மற்றும் நிலம் தொடர்பான அதிகாரம் செயல்படுத்தப்படவே இல்லை. ஆரம்பத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாண கவுன்சில் என்று பெயரிடப்பட்டது. ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, இணைக்கப்பட்ட மாகாணங்கள் மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டன.

இது ஏன் சர்ச்சைக்குள்ளானது?

இலங்கை உள்நாட்டு போரின் போது, 13 ஆவது சட்ட திருத்தத்தின்படி, குறிப்பிடத்தக்க சலுகை களை வழங்க வழிவகுத்தது. ஆனால், இதனை சிங்கள தேசியவாத கட்சிகளும், விடுதலைப் புலிகளும் எதிர்த்தனர். அதிக அளவு அதிகாரம் தமிழ் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக சிங்கள தேசியவாத கட்சிகள் கருதினர்.  விடுதலைப் புலிகளோ, மிகவும் குறைவான சலுகைகள் என்று கருதினர்.

இடதுசாரிகளான தேசிய ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட பெரும்பாலான சிங்கள அரசியல் கட்சியினர், இது ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறி எதிர்த்தனர். மேலும், இந்திய- இலங்கை உடன்படிக்கையும், அதன் விளைவாக வந்த சட்டமும் இந்திய தலையீடு என்று கருதினர். செல்வாக்கு பெற்ற அதிபர் ஜெயவர்த்தனே இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட போதிலும், ஓர் அண்டை நாட்டின் ஆதிக்கம் என்றே பரவலாக கருதப்பட்டது.

ஆனால், தமிழ் அரசியல் கட்சிகள், குறிப்பாக தேசியத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கட்சிகள், 13 ஆவது சட்ட திருத்தத்தின் நோக்கமோ, பொருளோ போதுமானதாக இல்லை என்று கருதினர். எனினும், தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட சில தமிழர் கட்சிகள், போருக்குப் பிந்தைய காலத்தில் நாடாளுமன்றத்தில் வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். சமீப தேர்தலில் இந்த பிரதிநிதித்துவத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

13 ஆவது சட்ட திருத்தம் ஏன் முக்கியமானது?

நீண்ட கால தமிழர் பிரச்சினைக்கு 13 ஆவது சட்ட திருத்தம் மட்டுமே அரசியல் சாசன அங்கீகாரம் அளித்துள்ளது. 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து வளர்ந்து வரும் சிங்கள-புத்த மத பெரும்பான்மையினரை எதிர்கொள்ளும் வகையில், கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து 13ஆவது சட்ட திருத்தம் அளித்த அதிகாரப் பகிர்வு குறிப்பிடத்தக்க பலனை அளித்தது.

13 ஆவது சட்ட திருத்தத்தை ரத்து செய்ய விரும்புவது யார், ஏன்?

புதிய அரசு பதவியேற்றதும், மாகாண சபை களை கலைக்க வேண்டும் என தற்போதைய அரசில் செல்வாக்குமிக்க அமைச்சர்கள் முதல், உள்ளாட்சித் துறைக்கு நியமிக்கப் பட்டுள்ள முன்னாள் கடற்படை அதிகாரி, மாநில அமைச்சர்கள் வரை பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாகாண சபைகளை அவர்கள் ‘வெள்ளை யானை’ என்று கருதுகிறார்கள். சிறிய நாட்டில் மாகாண சபைகளை இலங்கை அரசு கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என வாதிடுகிறார்கள்.

தமிழ் சிறுபான்மையினத்தோருக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை அடிப்படைவாதிகளான எதிர்முகாமினர் எதிர்க்கிறார்கள். மாகாணசபை முறையை அனைத்துக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தாலும், அவர்கள் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டே வந்துள்ளனர். கட்சியை வலுப்படுத்தவும், அமைப்பு ரீதியாக கட்டமைக்கவும், மாகாண சபை தேர்தல்  தேசிய கட்சிகளுக்கு உதவியது.

ராஜபக்சேக்களின் நிலை என்ன?

13 ஆவது சட்ட திருத்தத்தை ரத்து செய்வது குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவோ, இரண்டு முறை அதிபராக இருந்தவரும், தற்போதைய பிரதமருமான  மஹீந்தா ராஜபக்சேவோ இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில், 13 ஆவது சட்ட திருத்தத்தில் உள்ளதை தவிர, மேலும் பல சலுகைகளை அளிப்பதாக உறுதியளித்தார். அவரது வாக்குறுதி ’13 பிளஸ்’ என்ற பெயரில் அப்போது பிரபலமானது. 2013 ஆம் ஆண்டு  வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தியது வரலாற்றுச் சிறப்புமிக்கது என வரவேற்கப்பட்டது. ஆனால், மாகாண சபைகளுக்கு அளித்த காவல் துறை மற்றும் நிலம் தொடர்பான அதிகாரத்தை அவரது அரசு திரும்ப எடுத்துக் கொண்டது.

கடந்த காலங்களில் இந்தியா அளித்த உத்தரவாதங்கள் ரகசியம் ஒன்றும் அல்ல. இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை ஓரிரு முறை சந்தித்தபோது, 13 ஆவது சட்ட திருத்தத்தைப் பற்றி அவர்களிடம் பேசியிருக்கிறார். ஆனால், புவிசார் பாதுகாப்பின்மை அதிகரித்து வரும் நிலையில்,  தமிழர்கள் பிரச்சினை குறித்து இந்தியா எப்படி பேச முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் இலங்கையில் உள்ள அரசியல் பார்வையாளர்கள்.

கட்டுரையாளர்: ஆ.கோபண்ணா