மாநிலங்களவையில் ரேணுகா சிரிப்பு: பாஜக எம்.பி.சத்ருகன் சின்ஹா ஆதரவு டுவிட்

--

 

டில்லி:

பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடந்த 7ந்தேதி பேசினார். மாநிலங்களவையில் மோடி பேசும்போது, ,காங்கிரஸ் எம்.பி.யான ரேணுகா சவுத்ரி கடகடவென சிரித்தார். அவருடைய சிரிப்பு அவையில் இருந்த உறுப்பினர்களை அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. பிரதமர் மோடியும் அவரது சிரிப்பு குறித்து விமர்சனம் செய்தார்.

இதன் காரணமாக அப்போது சபையை நடத்தி வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கோபமடைந்தார். பாரதியஜனதா எம்.பிக்களும் கடுமையாக  விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், ரேணுகாவுக்கு   ஆதரவு தெரிவித்து பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா டுவிட் செய்துள்ளார். அதில், சிரி ரேணுகா சிரி, நான் உன்னுடன் இருக்கிறேன்… எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இரு. அவர்கள் தற்போது கூக்குரலிட்டு அழுது கொண்டிருக்கிறார்கள். இது விரைவில் முடிவுக்கு வரும். பெண்களின் சிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் விரைவில் வருத்தம் தெரிவிப்பார்கள் என்று கூறி உள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.யான ரேணுகாவின்  சிரிப்புக்கு  ஆதரவும் எதிர்ப்பும்  தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  சிரிப்பதற்கு நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என்ற ரேணுகா, மாநிலங்களவையில் சிரித்ததன் மூலம் அதிகார சக்திகளின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளேன். என்னை  விமர்சித்ததன் மூலம், பிரதமர் எவ்வளவு குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

நல்லவேளை சிரிப்பதற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை. நான் இயல்பாகவே சத்தமாக சிரிக்கும் பழக்கம் கொண்டவள். இனி எச்சரிக்கையாக இருப்பேன். பெண்களை எப்படி சமமாக நடத்த வேண்டும் என்று எம்.பி.,க்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று ரேணுகா சவுத்ரி தெரிவித்துள்ளார்.