குடும்பங்களை ட்ரம்ப் பிரிப்பது இதயத்தை நொறுக்குகிறது : லாரா புஷ்

 

வாஷிங்டன்

மெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைபவர்களின் குடும்பத்தை அதிபர் ட்ரம்ப் பிரிப்பதால் தனக்கு இதயம் நொறுங்குகிறது என முன்னாள் அதிபர் புஷ்ஷின் மனைவி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் விவகாரத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக செயல்படுகிறார்.   அவருடைய இந்த திட்டத்துக்கு பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.    ட்ரம்ப் அதைப் பற்றி கவலைப்படாமல் மேலும் மேலும் கடுமையான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

இந்த திட்டத்தினால் சட்ட விரோதமாக குடும்பத்துடன் அமெரிக்காவில் நுழைபவர்கள் தனியாக பிரிக்கப் படுகின்றனர்.    பெற்றோர்களும் குழந்தைகளும்,  கணவன், மனைவியும் பிரிக்கப்படுகின்றனர்.    இது போல 2000 குடும்பங்கள் கடந்த 6 மாதங்களில் பிரிக்கப்பட்டுள்ளன.   அத்துடன் அடைக்கலம் நாடி அமெரிக்கா வருபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.   குழந்தைகள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப் படுகின்றனர்.

இது குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா புஷ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவர், “ஒரு குடும்பத்தை பிரித்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்துக்கு அனுப்புவது மிகவும் கொடூரமான செயலாக எனக்கு தோன்றுகிறது.    இந்த செய்கையைக் கண்டு நான் மனம் உடைந்து போய் உள்ளேன்.   இது என் இதயத்தை நொறுக்கும் செயலாக உள்ளது” என தெரிவித்துள்ளார்..

இந்த குடும்பத்தை பிரிக்கும் திட்டத்துக்கு  டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலானியாவும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.  அவர், “குழந்தைகளையும் பெற்றோர்களையும் பிரிப்பதை என்னால் பார்க்கக் கூட முடியவில்லை.  இந்த செயலை கடுமையாக வெறுக்கிறேன்.” எனக் கூறி உள்ளார்.