சட்ட மாணவர் தற்கொலை: காதலி கவலைக்கிடம்: சாதி பிரச்னை காரணமா?

திருச்சி:

திருச்சியில் விசம் அறிந்து மரணமடைந்த சட்டக்கல்லூரி மாணவரும், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறும் அவரது காதலியும் சாதி பிரச்சினை காரணமாகத்தான் தற்கொலை முடிவு எடுத்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் அருகே மாநகராட்சி மாடுவதைக்கூடம் மற்றும் கல்லறை தோட்டம் உள்ளது. இன்று காலை இங்கு தொழிலாளர்கள் வந்தபோது ஒரு  இளைஞரும் இளம்பெண்ணும்  அங்கு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தனர். அருகில் இரு சக்கரவாகனம் ஒன்றும் நிறுத்தப்பட்டு இருந்தது.
உடனடியாக கன்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  விரைந்து வந்த காவல்துறையினர், அந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் ஏற்கெனவே அந்த இளைஞர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்தவரின் செல்போன் மற்றும் ஐடி கார்டு மூலம் காவல்துறையினர் துப்பு துலக்கியதில் அவர்,  ஈரோடு மாவட்டம் சித்தோட்டை சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரகாஷ்(21), திருச்சி சட்டகல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தவர் என்பது தெரியவந்தது. சுப்பிரமணி வக்கீல் குமாஸ்தாவாக வேலை செய்கிறார்.
கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்,  ஈரோடு சத்திரத்தை சேர்ந்த பாலசந்தர் மகள் அட்சயா. பிளஸ் 1 படித்து வருகிறார்.
இருவரும் காதலித்து வந்தனர் என்பதும், இந்த காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு இருந்தததும் விசாரணையில் தெரியவந்தது.
சாதி பிரச்சினை காரணமாக இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.