ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ரூ.4,555 கோடி தேவை….. சட்ட ஆணையம் தகவல்

டில்லி:

லோக்சபாவுக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் எந்திரங்கள் வாங்க ரூ.4,500 கோடி தேவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை பாஜக கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக சட்ட ஆணையத்துக்கு பாஜக மனு அளித்தது. இதன் அடிப்படையில் சட்ட ஆணையம் வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு நாடு முழுவதும் 10.60 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்றால் தற்போதைய நிலவரப்படி 12.9 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு எந்திரங்கள், 12.3 லட்சம் அத்தாட்சி சீட்டு வழங்கும் எந்திரங்கள் பற்றாகுறையாக உள்ளது. ஒரு வாக்குப்பதிவு எந்திரம், ஒரு கட்டுப்பாட்டு எந்திரம், ஒரு வாக்குச்சீட்டு எந்திரங்கள் அடங்கிய ஒரு தொகுப்பின் விலை ரூ. 33,200 ஆகும். பற்றாகுறை எந்திரங்கள் வாங்க ரூ.4,555 கோடி தேவைப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இதன் அடிப்படையில் 2024ம் ஆண்டில் ஒரே தேர்தலாக நடத்த 1,751.17 கோடியும், 2029ம் ஆண்டில் 2,017.93 கோடியும் தேவைப்படும். 2034ம் ஆண்டில் ரூ.13,981 கோடி தேவைப்படும்’’என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.