தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து தலைமை நீதிபதி யார்?,,,,உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு கடிதம்

டில்லி:

தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து யாரை தலைமை நீதிபதியாக நியமனம் செய்வது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி காலம் வரும் அக்டோபர் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர்கள் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த வகையில் தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது? என்ற பட்டியலை பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இது ஒரு சம்பிரதாய கடிதம் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெறுபவர் ஒரு மாதத்திற்கு முன்பு அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கான மூப்பு பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்காகவே இந்த கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகம் எழுதியுள்ளது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்பட்டி மூத்த நீதிபதி ரஞ்சன் கோகோய் மூப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்த கடிதத்துக்கான பதில் கடிதத்தை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒரு சில நாட்களில் அனுப்பிவைப்பார் என்று கூறப்படுகிறது. நீதிபதி கோகோய் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தேசிய குடிமக்கள் பதிவேடு வழக்கை விசாரித்த அமர்வில் இடம்பெற்றவர். அதோடு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.