கந்துவட்டி தீக்குளிப்பு: நெல்லையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி கைது!

திருநெல்வேலி,

த்துவட்டி தொல்லை காரணமாக தீக்குளித்த நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி  தனது தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் கந்து வட்டி கொடுமை காரணமாக தீக்குளித்தார். இதில் அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இசக்கிமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வரும் கந்துவட்டிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் டாஸ்மாக்-க்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்த மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தையுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு  வந்தார்.

கந்து வட்டிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி  நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு கோரிக்கை அட்டையுடன் தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.  மாணவி நந்தியினியுடன் அவரது தந்தையும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த போலீசார் விரைந்துவந்து, உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடையாது என்று கூறி அவரை அகற்ற முயற்சித்தனர்.

ஆனால்,  மாணவி நந்தினி தொடர்ந்து அந்த இடத்தை விட்டு அகல மறுத்து, தொடர்ந்து  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.

இதையடுத்து மாணவி நந்தினியையும், அவரது தந்தையையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதன் காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.