பாலியல் வழக்கு: முன்னாள் பாஜக மத்தியஅமைச்சர் சுவாமி சின்மயானந்தா கைது!

லக்னோ:

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக  சட்டக் கல்லூரி மாணவி அளித்த புகாரைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் (ஆகஸ்ட்) 24ந்தேதி உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தனது கல்லூரி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர் தன்னிடம் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த வீடியோவில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

ஆனால், அந்த வீடியோவில் “சன்த் சமாஜத்தின் ஒரு பெரிய தலை, பல்வேறு பெண்களின் வாழ்வை சீரழித்தவர் இப்போது என்னையும் கொலை செய்ய முயல்கிறார். அவர் எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். தயவு செய்து உதவுங்கள். அவர் தனது கையில் போலீஸ், உயரதிகாரிகளை வைத்துள்ளார். முதல்வர் யோகி அவர்களையும், பிரதமர் மோடி அவர்களையும் உதவிக்கு அழைக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்த வீடியோ வைரலானது. இந்த நிலையில், அந்த சட்டக்கல்லூரி மாணவி திடீரென மாயமானார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை உச்ச நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து,  ராஜஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சட்டக்கல்லூரியின் உரிமையாளர் முன்னாள் மத்திய அமைச்சரான சின்மயானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதி மன்றம் அமைத்தது. அந்தக் குழுவினர் சின்மயானந்தாவிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.

அதுபோல பாதிக்கப்பட்ட மாணவியுடமும் விசாரணை குழுவினர்  விசாரணை நடத்தினர். அப்போது, சின்மயானந்தா, தன்னை  ஒரு வருடத்திற்கு மேலாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிவித்தார். மேலும், மாணவியின் தநதை, இது தொடர்பாக 43 வீடியோக்களையும்  சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஆதாரமாக வழங்கினார்.

இந்த நிலையில் சின்மயானந்தா இன்று கைது செய்யப்பட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சரான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் ஒருவர்,  சுவாமி சின்மயாநந்தா தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.