வழக்கறிஞர்கள் – காவலர்கள் மோதல்: போராட்டத்தை வாபஸ்பெற்றனர் வழக்கறிஞர்கள்

டெல்லி:

டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, வழக்கறிஞர்கள் நிதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் 11 நாட்களுக்கு பிறகு தற்போது வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

டெல்லி நீதிமன்றத்தில்  வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக கடந்த 2ஆம் தேதி ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கைகலப்பில் முடிந்தது. காவலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் ஒருவர்மீது ஒருவரை குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த மோதலில் 20 போலீஸாரும், வழக்குரைஞர்கள் சிலரும் காயமடைந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நவம்பர் 4 முதல் ஆறு மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சக போலீஸாரை வழக்குரைஞர்கள் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்து காவல் துறை தலைமையகத்திற்கு வெளியே போலீஸார் நவம்பர் 5-ம் தேதி 11 மணி நேரம் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக காவல் துறை உதவி ஆய்வாளர்கள் காந்தா பிரசாத், பவன் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இடைநீக்கமும் செய்யப்பட்டனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளை கைது செய்யாமல் இருக்கும் வகையில், டில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் பல்வேறு நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் இரு தரப்பினருக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில்  “வழக்குரைஞர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் தொடரக் கூடாது என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவையேற்று, போராட்டத்தை தற்போதைக்கு வாபஸ் பெறுவதாக எங்கள் குழுவின் உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

எனினும், எங்கள் போராட்டங்கள் வேறு வகையில் தொடரும். வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப் படவேண்டும்  என்று டில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் பார் அசோசியேஷன்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மஹாவீர் சர்மா கூறியுள்ளார்.

“அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் வழக்குரைஞர்களும் நவம்பர் 20-ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு வெளியே தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்’ என்று ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளர் தீர் சிங் கசனா தெரிவித்துள்ளார்.