பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பெண் சிபிஐ அதிகாரி விசாரிக்க கோரி வழக்கு: சிபிஐக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

--

சென்னை:

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து  பெண் சிபிஐ அதிகாரியை கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பெண் வழக்கறிஞர்கள்  சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து பதில் அளிக்க சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்களையும் குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து தற்போது சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில்,  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர் பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக்கோரி பெண் வழக்கறிஞர்கள் அஜிதா, ஆதிலட்சுமி லோகமூர்த்தி, சுதா உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை பாதுகாக்கும் கடமையில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது என்றும்,  தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்,  இந்த வழக்கை உயர் பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனைகள், மருத்துவ உதவி கள், சட்ட உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,  சாட்சிகளுக்கு,  சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்,  பாதிக்கப்பட்ட பெண்களின் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தஹில் ரமனி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து  சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.