டில்லி

ந்திய பார் கவுன்சில் வரும் 12 ஆம் தேதி நாடு தழுவிய வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய பார் கவுன்சில் எனப்படும் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் டில்லியில் உள்ளது. இந்த கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதன் பிறகு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் இணைந்து நேற்று மதியம் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.

அந்த சந்திப்பில் பார் கவுன்சில் தலைவ்ர் மனன் குமார் மிஸ்ரா பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ள கடிதத்தின் நகல் அளிக்கப்பட்டது.

அந்த கடிதத்தில் எழுப்பப் பட்டுள்ள கோரிக்கைகள் பின் வருமாறு :

1. வழக்கறிஞர்களுக்கும் அவரை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கும் ரூ.20 லட்சத்துக்கான காப்பீடு

2. நோயுற்ற வழக்கறிஞர் மற்றும் அவர் குடும்பத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் இதற்கான சிறப்பு திட்டம் மற்றும் அடையாள அட்டைகள்

3. மூத்த/நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு இறக்கும் வரை மாதம் ரூ.50000 ஓய்வூதியம்

4. பார் கவுன்சிலில் பதிந்த புதிய வழக்கறிஞர்களுக்கு 5 வருடங்களுக்கு மாதம் ரூ.10000 உதவித் தொகை

5. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றல்

6. நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்துக்கும் அரசு சார்பில் நூலகம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் அமைத்துக் கொடுத்தல்

7. வட்டி இல்லா வீட்டுக்கடன், புத்தகம் மற்றும் வாகனம் வாங்க கடன் மற்றும் அரசு சார்பில் மலிவு விலையில் வீடு கட்ட நிலம் அளித்தல்

8. சட்ட சேவை விதிகள் – இந்த விதிகள் மூலம் அனைத்துச் சட்ட சேவைகளையும் வழக்கறிஞர்கள் மட்டுமே (நீதிபதிகள் அல்ல) செய்ய வழி வகை செய்ய வேண்டும்.

9. ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு அமைக்கப்படும் அனைத்து விசாரணைக் ஆணையங்களிலும் வழக்கறிஞர்களையும் சேர்க்க வேண்டும்.

10. ஒரு வழக்கறிஞர் 65 வயதுக்கு முன்பு விபத்து, கொலை, நோய் அகியவற்றால் மரணம் அடைந்தால் அரசு அவருடைய குடும்பத்தினருக்கு உடனடியாக  ரூ. 50 லட்சம் உதவித் தொகை அளிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி அன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அனைத்து மாநில உயர்நீதிமன்றத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரை ஊர்வலம் ஒன்று இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தின் போது வழக்கறிஞர்கள் தங்கள் நீதிமன்ற சீருடையுடன் கலந்து கொள்ள உள்ளனர்.