விசில் அடித்த மாணவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று “திட்டிய” இளையராஜா

மேடையில் தான் பேசியபோது விசில் அடித்த மாணவர்களை “கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்டுகள்” என்று இளையராஜா விமர்சித்தது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இசைஞானியுடன் ஒரு இசை மாலை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் மூகாம்பிகை கோயிலுக்கு 1974 ஆம் வருடம்  தான் சென்ற நிகழ்வு குறித்து பேசினார். அப்போது அரங்கில் இருந்த மாணவர்கள் விசில் அடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளையராஜா, “நீங்கள் எல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் பார்ட்டிகள்” ஆத்திரத்துடன் கூறினார்.

தொடர்ந்து, “இசை குறித்து பேசிய இளையராஜா, “ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பைத்தியம். நான் இசைப் பைத்தியம். . இசையை கற்றுக்கொண்டால் வன்முறைக்கு போக தோன்றாது” என்று பேசினார்,

மாணவர்களை ஆத்திரத்துடன் இளையராஜா விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“இளையராஜா சிறப்பாக இசை அமைக்கிறார்.. பாடுகிறார்.ஆனால்  பேச்சில் நிதானமில்லை.  பிரபல இயக்குநர் பாரதிராஜாவையே தரக்குறைவாக ஒருமுறை பேசினார்.. ஒரு இதழிலும் எழுதினார்.அதே போல செய்தியாளர்களைப் பார்த்து அறிவிருக்கா என்று கேட்டார். இயேசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார்.  அவரது பேச்சில் ஆணவம்தொணிக்கிறது. சிறந்த இசைக்கலைஞர் என்பதோடு, முதியவரும்கூட. வயதுக்கேற்ற பக்குவத்தை அவர் ஏற்படுத்தக்கொள்ள வேண்டும்” என்று அங்கிருந்த மாணவர்களும் ஆசிரியர்கள் பலரும் பேசிக்கொண்டனர்.