சென்னை:

காவிரி விவகாரம் காரணமாக சென்னை மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கிறார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாக மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் கடந்த 11 நாட்களாக அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர், மாணவர்கள் என பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே உண்ணாவிரதம், கடை அடைப்பு , பந்த், ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டம், ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடை பயணம்  என பல வகையான போராட்டம் நடைபெற்றுள்ள நிலையில் இன்று சென்னை வரும் மோடிக்கு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கருப்புகொடி போராட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு,சென்னை மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கிறார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு மெரினா  போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை காரணமாக, மெரினாவில் எந்தவித போராட்டமும்  நடத்த அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காவிரிக்காக உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என அய்யாக்கண்ணு உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளார்.