டில்லி

பிரபல மலையாள பத்திரிகையான மாத்ருபூமியின் இயக்குநர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான வீரேந்திரகுமார் மறைவுக்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் வயநாடு பகுதியைச் சேர்ந்த வீரேந்திர குமார் (வயது 84) மாத்ருபூமி பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் ஆவார்.  தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இவர் முன்னாள் மத்திய அமைச்சர், பிடிஐ நிர்வாக இயக்குநர் எனப் பல பதவிகள் வகித்துள்ளார்   இவர் ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சி பி ஐ போன்ற கட்சிகளில் இருந்துள்ளார்.   இறுதியாக சி பி சி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

வீரேந்திரகுமார் கடந்த 1996 மற்றும் 2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.  இவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது.  இதனால் நேற்று முன் தினம் இரவு உயிர் இழந்தார்.  இவருடைய மறைவுக்குப் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “மாநிலங்களை உறுப்பினர் வீரேந்திர குமார் மறைவினால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். ஒரு திறமையான சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்குக் குரல் கொடுப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ” வீரேந்திரகுமார் மறைவு செய்தி கேட்டு நான் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எனது  இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.