சென்னை

இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மே 1 ஆம் தேதியான இன்று உலகெங்கும் தொழிலாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்:
தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் மே 1-ம் தேதிதொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், இந்தியாவின் நலனுக்கும், தமிழகத்தின் மேன்மைக்கும் இரவு பகல் பாராமல் உழைக்கும் தொழிலாளர் தோழர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் பழனிசாமி:
உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தினநல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான இந்த இனிய நாளில், தொழிலாளர்கள் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சி யாக வாழ வாழ்த்துகிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:
ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எப்போதும் தொழிலாளர்களின் தோளோடு தோள் நின்று துணைபுரியும் இயக்கம் திமுக. தொழிலாளர்களின் வாழ்வில் இன்பம் பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் திமுக சார்பில் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
கட்சிகளின் எல்லைகளைக் கடந்து அனைத்து தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை நிலைநாட்ட, மக்கள்விரோத ஆட்சியாளர்களை எதிர்த்துகளத்தில் நின்று போராட வேண்டியது மிகமிக அவசியமாகும். தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:
பாட்டாளிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கூட்டாளிகளின் துணையுடன் நிறைவேற்றிக் கொடுப்பதுதான் பாமகவின் முதன்மை இலக்கு. அந்த வகையில் பாட்டாளிகளின் உரிமைகளை வென்றெடுக்கும் பயணத்தின் தொடக்கமாக நடப்பு ஆண்டின் பாட்டாளிகள் நாள் அமையட்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
வறுமையை ஒழித்து, எல்லோருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைத்திட இந்த மேதின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம். ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர் களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:
அரசு, தனியார் என்ற பேதமெல்லாம் இல்லாமல் எல்லா நிறுவனங்களிலும் உழைப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் கிடைக்கச் செய்வதற்கு இந்த மே தினத்தில் உறுதி ஏற்போம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தமிழக உழைக்கும் மக்களின் பயணம் தொடர, உழைக்கும் மக்களின் ஒற்றுமையை குலைக்கும், சாதி, மத, இனவெறிகளுக்கு அப்பால் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு வாகைசூட வாழ்த்துகள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:
நவீன தாராளமயமாக்கல் கொள்கையை எதிர்த்து, மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்க உறுதி ஏற்போம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை. தொழிலாளர் நலன் காக்கும் அரசு பொறுப்பு ஏற்றால்தான், பெற்றஉரிமைகளைப் பேணிப் பாதுகாக்க முடியும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளால் பாதிக்கப்படும் சிறு குறு தொழில்களைப் பாதுகாக்கவும் தொழிலாளர் நலன்களை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:
அனைவருக்கும் அனைத்தும் என்ற சம வாய்ப்பும், சமத்துவ மாண்பும் மலரும் உண்மைச் சமதர்ம சமுதாயம் உருவாக்கப்பட இந்த நாளில் உறுதியேற்போம். தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்த குமார்: நெற்றி வியர்வை நிலத்தில்பட பாடுபடும் தொழிலாளர்கள் உரிமை பெற்றத் இத்திருநாளில் தொழிலாளர்கள் உழைப்பால் பாரத தேசத்தை உலகறியச் செய்த பெருமையை போற்றுவோம்.

என தங்கள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.