சென்னை: 2021 ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாம் கோவிந்த்  

வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,”புத்தாண்டு தினத்தன்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.  ‘2021ம் ஆண்டில், அமைதி மற்றும் நல்லெண்ணத்தை ஊக்குவிக்கும் அன்பு, இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் ஆவி நிறைந்த ஒரு உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்.’ நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும், மேலும் நமது நாட்டின் முன்னேற்றத்தின் பொதுவான இலக்கை அடைய புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் முன்னேறட்டும் ” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில்,  2021-ம் ஆண்டு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அளிக்கட்டும் என்றும் புத்தாண்டில் ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கை மேலோங்கட்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், அரசின் மக்கள் நலத்திட்டங்களால் தாய்த்தமிழ் உறவுகள் சிறப்புற பயனடைந்து, அனைத்து துறைகளிலும் முதலிடம் பெறும் வளமும் ஆற்றலும் மிக்க தமிழகத்தை மென்மேலும் வெற்றிநடைபோடும் தமிழகமாக தொடர்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

துணைமுதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்

வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மலர்கின்ற புத்தாண்டை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடும் அன்பிற்குரிய தமிழகமக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த இனியபுத்தாண்டு நல்வாழ்த்துகள்! இப்புத்தாண்டு அனைவர் வாழ்விலும் நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பொன்னாண்டாக அமையட்டும்.

எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய பெருமையோடும், புரட்சித்தலைவர் MGR, புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்க வழிசெய்யும் ஆண்டாக 2021 மலர்கிறது எனும் மகிழ்வோடும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை வாஞ்சையுடன் கூறி மகிழ்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்

வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இருள் நீங்கும்; கதிரொளி பரவும்! மக்களின் கவலைகளைத் துடைத்திட நல்லாட்சி மலரும்! உறுதியான நம்பிக்கையுடன் புத்தாண்டை உளமார வரவேற்கிறேன்! நம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நன்னெறியில் நாளும் உழைத்திட திமுக தயாராக இருக்கிறது. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்!

”ஆங்கிலப் புத்தாண்டை தொடர்ந்து – நம் பண்பாட்டை எடுத்துரைக்கும் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் நன்னாள்! மகிழ்ச்சி பொங்கும் காலம் விரைந்து வருவதை எடுத்துரைக்கும் வகையில், ‘சமத்துவப் பொங்கல்’ விழா கொண்டாட வாழ்த்துகிறேன்!”

மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்குகிற காலம் விரைந்து வருவதை எடுத்துரைக்கும் வகையில், தமிழ்ப்பண்பாடு தவழ்ந்திட  சமத்துவப் பொங்கல் கொண்டாட  வாழ்த்துகிறேன்.