தலைவர்களின் செல்போன் பிரச்சாரங்கள்

a

அறிவியல் யுகம் என்பதால் தேர்தல் பிரச்சாரங்களும் படு மார்டனாக நடக்க ஆரம்பித்துவிட்டன.

ஜெயலலிதா ஓரிடத்தில் பேசினால் அது தமிழகம் முழுதும் பல இடங்களில் சாலைகளில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. அதே போல தொ.காட்சிகளிலும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. தி.மு.கவும் சளைக்காமல் தொ.கா. விளம்பரங்களை செய்து வருகிறது.

அதோடு, இரு மாதங்களுக்கு முன்போ, செல்போன் பிரச்சாரத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி துவங்கினார்.  72200 72200 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால்  கருணாநிதி 30 விநாடிகள் பேசும் பதிவைக் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதே போல தற்போது அ.தி.மு.கவும் செல்போன் பரப்புரையை ஆரம்பித்துள்ளது  +91444672333  என்ற எண்ணிலிருந்து வரும் அழைப்பில் ஜெயலலிதாவின் குரல் ஒலிக்கிறது.

அதில், “வணக்கம். உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன்.

நினைவிருக்கிறதா உங்களுக்கு…? 15 மணி நேரம் தொடர்ந்து மின்வெட்டு. பள்ளி பிள்ளைகள் படிக்க முடியவில்லை. தொழில்கள் எல்லாம் முடங்கின. துன்பங்கள்தான் பெருகின.

இப்போது தமிழ்நாடு மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் மிகை மாநிலம் ஆகியுள்ளது. எங்கும் எப்போதும் எல்லோருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.

இந்த மகத்தான சாதனை தொடர, வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்துக்கே!”
– என்று ஜெயலலிதாவின் பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது.

கடந்த டிசம்பரில், சென்னையில் கடும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது வாட்ஸ்அப்பில் முதல்வரின் பதிவு செய்யப்பட்ட பேச்சு பலருக்கும் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் பேச்சும் வாட்ஸ்அப் செய்திகளாக அனுப்பப்படுகின்றன.

மேலும் கட்சிகள் இல்லாமல், அதன் ஆதரவாளர்கள் தங்கள் சொந்த முயற்சியில் செல்போனில் தகவல்கள் அனுப்பி பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது. இதில் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்களே அதிகம்.

படம்: வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ்  “வசிக்கும்” ஒரு குடும்பம் செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறது..