“தற்கொலை செய்துகொள்ள மாட்டோம்” என்று தனது கட்சி உறுப்பினர் படிவத்தில் உறுதிமொழி பெற இருப்பதாக சீமான் சொன்னது ஆறுதலாக இருந்தது.
ஆனால் அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது நம்பிக்கை இழக்க வைத்துவிட்டது.
அவரது கட்சி இளைஞரான விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நாங்க யாரும் தீக்குளித்து சாக வேண்டும் என்று சொல்லவில்லை” என்று நல்லபடியாக ஆரம்பித்தவர், “கர்நாடகாவில் அப்பாவித் தமிழர்கள் மீது வன்முறையை ஏவிவிடுகிறீர்களே? நியாயமான என அங்கே போய் பத்திரிகையாளர்கள் கேட்டுவிட முடியுமா?” எதை ஒன்றையும் இழக்காமல் பிறிதொன்றை அடைய முடியாது. தீக்குளிப்பு என்பது உணர்வெழுச்சியால் நிகழ்கிற ஒன்று” என்று தற்கொலை மூடத்தனத்துக்கு சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.
a
அதோடு, “எந்த ஒருவரது முறுக்கேற்றும் பேச்சால் தீக்குளிப்பு நிகழ்வதில்லை. அப்படியானால் ஊழல் வழக்கில் சிறைக்கு போன ஜெயலலிதாவுக்காக 100 தமிழர் தற்கொலை செய்து கொண்டார்களே? அம்மையார் ஜெயலலிதா என்ன முறுக்கேற்றுவது போல் தற்கொலை செய்து கொள்ளுவது போல் பேசினார்?
ஜெயலலிதாவிடம் போய் நீங்க என்ன ஆங்சாங் சூகியா? அன்னிபெசன்ட் அம்மையாரா? அன்னை தெரசாவா? உங்களுக்காக தற்கொலை செய்து கொண்டார்களே ஏன் என உங்களால் கேட்க முடியுமா?” என்றும் கேட்டிருக்கிறார்.

விக்னேஷ் இறுதிச் சடங்கில் சீமான், வைகோ
விக்னேஷ் இறுதிச் சடங்கில் சீமான், வைகோ

இந்த பேச்சுக்கள் எத்தனை அபத்தம்?
கர்நாடக வன்முறையையோ, ஜெயலலிதாவுக்காக நடந்த தற்கொலைகளையோ யார் ஆதரித்தார்கள்?  அப்படி ஒருவேளை யாரேனும் ஆதரித்திருந்தால் அது மூடத்தனம் – காட்டுமிராண்டித்தன் என்பதன்றி வேறென்ன?
தவிர அப்படியே அந்த பாதகங்களை ஏற்பவர்கள் இருந்தாலும், அதை மறுப்பவர்கள்தானே மனிதர்கள். அப்படித்தானே சீமான் சிந்திக்க வேண்டும்!
தவிர, ஆங்சாங் சூகி, அன்னிபெசன்ட் அம்மையார், அன்னை தெரசா ஆகியோருக்காக தற்கொலை செய்துகொள்ளலாம்: என்று பொருள்படும்படி பேசியிருக்கிறார் சீமான்.
இறுதிச் சடங்கில் "கம்யூனிஸ்ட்" மகேந்திரன்
இறுதிச் சடங்கில் “கம்யூனிஸ்ட்” மகேந்திரன்

இதுபோன்ற பேச்சுக்கள் முட்டாள் இளைஞர்கள் மத்தியில் தற்கொலை எண்ணத்தை விதைக்கும், வளர்க்கும்.
காவிரிக்காக என்றாலும் தீக்குளித்து மாண்ட அந்த இளைஞன் விக்னேஷின் மறைவை போற்ற வேண்டியதில்லை.
விக்னேஷின் உடலில் அவர் சார்ந்த, “நாம் தமிழர்” கட்சி கொடியை போர்த்த அவரது  உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அவரது தாயாரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
பிள்ளை செத்து, காவிரி கிடைத்தால் ஒருவேளை பெற்றவர்கள் ஒப்புக்கொள்ளக்கூடும். ராணுவத்தினர் இறந்தால், அவர்களது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளத்தானே செய்கிறார்கள்?
ஆனால் உபயோகமற்ற, சாவினால் யாருக்குத்தான் பலன்?
ஈ.வெ.ரா. பெரியார்,  எத்தனையோ பெரும் போராட்டங்களை நடத்தி நல்ல பல விளைவுகள் சமுதாயத்தில் ஏற்பட காரணமாக இருந்தார். ஆனால் அவரது எந்த ஒரு போராட்டத்திலும் ஒரு தொண்டன்கூட தற்கொலை செய்துகொண்டதில்லை.
விக்னேஷுக்கு, தமிழக அரசு இழப்பீடு தரவேண்டும் என பா.ம.க. ராமதாஸ் சொல்வதும், ம.தி.மு.க. வைகோ உட்பட சில அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்வதும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும்.  தற்கொலைகளைத் தூண்டுவதாகவே அமையும்.
எந்தவொரு காரணத்துக்காகவும் இருக்கட்டும்.. தற்கொலை செய்துகொள்பவரை  கொண்டாடாதீர்.. புகழாதீர்…  கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள், தலைவர்களே!  அதுதான் அடுத்தடுத்து தற்கொலைகள் நடக்காமல் தடுக்கும்.
: டி.வி.எஸ். சோமு
தொடர்புக்கு:  aasomasundaram@gmail.com  https://www.facebook.com/reportersomu