விற்பனைக்கு வரும் பிரபல நாளிதழ்! வாங்க போட்டி போடும் மருமகன்கள்!

--

நியூஸ்பாண்ட்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரில் வந்தார் நியூஸ்பாண்ட்.

“என்ன ரொம்ப பிஸியோ..” என்றோம் கொஞ்சம் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி.

சிரித்துக்கொண்ட நியூஸ்பாண்ட், “நேரில் வராவிட்டால் என்ன..  உடனுக்குடன் பல செய்திகளை அனுப்புகிறேன். அதை என் பெயரில் இல்லாமல் பொதுவான செய்தியாக பிரசுரித்துவிடுகிறீரே…” என்றார்.

“சரி…  இப்போது நேரடி விஜயத்துக்குக் காரணம் என்னவோ” என்றோம்.

“நீர் அன்புடன் அளிக்கும் மசாலா டீதான் காரணம்” என்றார் புன்னகையுடன்.

உடனடியாக மசாலா டீ தருவித்துக் கொடுத்தோம். சோபாவில் நன்றாக சாய்ந்தபடி, ரசித்து அருந்திய நியூஸ்பாண்ட், “என்ன அது சத்தம்.. மணிக்கூண்டில் இருந்து ஓசையா” என்றார்.

“அப்படியேதும் இல்லையே…” என்று சொல்ல வந்த நாம், ஏதோ செய்திக்கு லீட் கொடுக்கிறார் என்பதை உணர்ந்து, “அட..ஆமாம்…” என்றோம் சிரித்தபடியே.

தொண்டையை செருமிக்கொண்ட நியூஸ்பாண்ட், “ தினமும் ஓசை எழுப்பும் பிரபல நாளிதழ் விற்பனைக்கு வருகிறதாம்.. அது குறித்த பேச்சு வார்த்தைகள் சீரியஸாக ஓடிக்கொண்டிருக்கின்றன..” என்றார்.

“அட… அந்த நாளிதழ் வட – தென் பாகமாக சில வருடங்களுக்கு முன் பிரிக்கப்பட்டதே..” என்றோம்.

“ஆமாம்.. வட பாக நாளிதழ் சிறப்பாக இயங்கி வருகிறது. தென் பாகத்தில்தான் ஏகப்பட்ட பிரச்சினைகள். இதனால் தமிழக தலைநகரில் அலுவலகம், அச்சகம் இருந்த இடத்தைக் கூட மால் ஆக மாற்றிவிட்டு வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்!”

“ஆமாம்…. இப்போது என்ன பிரச்சினையாம்.. சமீதத்தில் கூட ஆட்கள் தேவை என விளம்பரம் எல்லாம் கொடுத்தார்களே….”

“ஆமாம்.. ஆட் சேர்ப்பு ஒருபுறம் நடக்கிறது.. அதே நேரம்… விற்றுவிட்டு வேறு தொழில்களில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்துவிட்டார்களாம்.”

“ஓ..”

“இதற்கான பேச்சுவார்த்தையில் அந்த நிர்வாகத்தின் சார்பாக ஈடுபடுபவர்,  கீர்த்தி, மூர்த்தி இரண்டும் பெரிதான “குரு”வானவர்..!”

“புரிகிறது.. புரிகிறது…! கழுதையுடன் நெருக்கமான தொடர்புகொண்ட வார இதழில் தற்போதைய ஆசிரியர் + அதிபர்தானே” என்று சிரித்தோம்.

“ஆமாம்… ஆமாம்…” என்று சிரித்தார் நியூஸ்பாண்ட்.

“சரி.. வாங்குவதற்கு யார் யார் போட்டியிடுகிறார்களாம்” என்றோம்.

“ஆச்சரியம் என்னவென்றால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி இரண்டுமே இந்த நாளிதழை வாங்குவதற்கு போட்டி போடுகின்றன. இரு தரப்பில் இருந்தும் “குரு”வானவரிடம் பேசி வருகிறார்கள்…”

“ஓ…”

“ஆமாம்… ஆளும் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு, அவர்கள் வசம் இல்லை அல்லவா.. ஆகவே தங்களுக்கென்று ஒரு நாளிதழ் தேவை என்று கருதுகிறார்கள் அவர்கள்.  ”

“சரிதான்.. ”

“அதே நேரம் எதிர்க்கட்சி தரப்பும் இந்நாளிதழ் மீது கண் பதித்திருக்கிறது..”

“அவர்களுக்கு என்றுதான் அதிகாரபூர்வ நாளேடு இருக்கிறதே. தவிர தலைமையின்  நெருங்கிய உறவினர்கள் நடத்தும் நாளேடும் இருக்கிறதே..”

“அதிகாரபூர்வ நாளேட்டை கட்சிக்காரர்களே படிக்கிறார்களா இல்லையா என்பது தெரியாது. தவிர தலைமைக்கு நெருக்கமான சூரிய நாளேட்டை நம்ப முடியாது என்று நினைக்கிறார்கள் தற்போது தலைமையில் இருப்பவர்கள். இடையில் உட் கட்சி – உள் குடும்ப – பிரச்சினை ஏற்பட்ட போது, சூரிய நாளேடு தனது நிலைபாட்டை கட்சிக்கு எதிராகவே மாற்றிக்கொண்டதை சுட்டிக்காட்டுகிறாராம் செயலானவர். தவிர,. தங்களுக்கென்று தனித் தொலைக்காட்சி சேனல்கள் இருப்பதைப்போல தனி நாளேடு வேண்டும் என்று நினைக்கிறாராம் அவர்”

“அதுவும் சரிதான்..”

“அந்த தின ஒலி நாளிதழை வாங்கும் பேரத்தில் ஆளும் தரப்பில் மூலவரின் மருமகன் ஈடுபட்டிருக்கிறார். அதே போல எதிர்க்கட்சி தரப்பில் செயலின் மருமகன் ஈடுப்டடிருக்கிறார்.”

“ஓ… எந்த மருமகன் பேரத்தில் ஜெயித்து நாளிதழை வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்” என்று நாம் சொல்ல.. சிரித்தபடியே கிளம்பினார் நியூஸ்பாண்ட்.