சென்னை,

ஆர்.கே.நகரில்,  டிடிவி தினகரனின் வெற்றியை தடுக்காத ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். ஆகியோர் ஆண்மையற்ற பேடிகள். அவர்களுக்கு லஞ்சம் வாங்குவதும், காலில் விழுவதும்தான் தெரியும் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி டுவிட்டரில் விமர்சித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தியை படித்த முட்டாள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி  அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சிஅலையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இது குறித்து விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், ஓ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளருமான கே.பி.முனுசாமி, “அப்படி குருமூர்த்தி தெரிவித்திருந்தால் தவறு. அவர் ஒரு பத்திரிகை ஆசிரியர். அவர் அப்படி பேசியிருக்க மாட்டார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசினார். அப்போது, 

அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளைகள். காங்கேயம் காளைகளைப் போல இயக்கத்தை கட்டிக் காத்து வருகின்றனர். தனக்கு ஆண்மை இல்லாதவன்தான் அடுத்தவர்களைப் பற்றி பேசுவான்.  அவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி அவர் யோசிக்க வேண்டும்

படிக்காத ஒருவர் கூட பண்பாளராக நடக்கிறார். ஆனால் படித்த ஒரு முட்டாளாக இருப்பதுதான் வேதனையாக உள்ளது  என்றும், அவர்  என்ன கிங் மேக்கரா எனவும் அவர் வினவினார்.

ஆடிட்டர் குருமூர்த்தி புரிந்து பேச வேண்டும் என்றும் தடித்த மோசமான வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும்; இல்லையென்றால் அதற்கான பலனை அவர் அனுபவிக்க வேண்டும்.

ஆடிட்டர் குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. எந்த முகத்தைக் கொண்டு அவர் பேசுகிறார். ஒரு ஆடிட்டராக இருப்பவர், பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்பவர் இப்படிப்பட்ட வார்த்தையைக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது

மேலும் எதற்கும்  ஒரு  எல்லை உண்டு என்றும், நாவடக்கத்துடனும், நிதானத்துடனும்  பேச வேண்டும்,  அவசியமெனில் குருமூர்த்திமீது வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படும் , அதிமுக கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்குற அமைச்சர், குருமூர்த்தி அறிவுரைப்படி தமிழக அரசு இயங்கவில்லை என்றும் ,  அனைவரும் தங்கள் எல்லையை உணர்ந்து பேசவேண்டும்.

இவ்வாறு ஜெயக்குமார் ஆவேசமாக பேசினார்.