ஆச்சரியமான ஒரு விசயம் தமிழக பா.ஜ.க.வில் நடந்திருக்கிறது. மாநிலத் தலைவராக இருந்தாலும், பல்வேறு அழுத்தங்களினால் நீக்குபோக்காக நடந்துகொண்டிருந்த மாநிலத்தலைவர் தமிழிசை, தற்போது, “நான் சொல்வது மட்டும்தான் தமிழக பாஜக கருத்து” என்று முதன் முறையாக அதிரடியாக பேசியிருக்கிறார்.

தமிழக பாஜகவைப் பொறுத்தவரை எல்.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா என்று வெளியே அறியப்பட்ட கோஷ்டிகளும், அறிப்படாத இன்னும் சில கோஷ்டிகளும் உண்டு.

இவர்களை எல்லாம் சமாளிக்க முடியாத நிலையில்தான் தமிழிசை இயங்கி வந்தார். ஆளுக்கொரு கருத்து கூறுவார்கள்.  ஆளுக்கு ஒரு நியமனங்களை உறுதி செய்வார்கள்.

இந்த நிலையில்தான் வந்தது  எச்.ராஜா மூலமாக “பெரியார் சிலை” பிரச்சினை.

‘திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதைப் போல, தமிழகத்தில் பெரியார் சிலைகளையும் தகர்ப்போம்” என்று தனது முகநூல் பக்கத்தில் ராஜா பதிவிட, அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்க.. அவர்களே எதிர்பாராத அளவுக்கு சமூகவலைதளங்களில் ராஜாவுக்கு கண்டனங்கள் குவிந்தன.

இதையடுத்து தனது பதிவை நீக்கினார் ராஜா. அதோடு, தனது பக்கத்தை நிர்வகிப்பவர் தன் அனுமதி இன்றி பதிவிட்டுவிட்டார் என்றும் இதற்காக வருந்துவதாகவும் தெரிவித்தார்.

ஆனாலும் ராஜாவுக்கு எதிரான கண்டனக்கணைகள் குறயவில்லை. இதற்கிடையே ராஜாவின் கருத்து அவரது சொந்தக் கருத்து என்றார் தமிழிசை. வழக்கமாக இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போதெல்லாம் அவர் சொல்லும் வாசகம்தான் இது. ஆகவே அவரும் சமூகவலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டார். கண்டனங்களுக்கு உள்ளானார்.

இதற்கிடையே  திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட, உடைத்த கட்சிக்காரர் ஒருவரை நீக்கினார்.

“இதுவே இவரது அதிகப்படியான நடவடிக்கைதான்” என்றுதான் அரசியல்  மட்டத்தில் பேச்சு இருந்தது.

இதற்கிடையே பெரியார் சிலை பிரச்சினை தொடர்ந்து பூதாகரமாக, பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி எல்லாம்கூட இது குறித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் எச்.ராஜாவின் சொந்த மாவட்டமான காரைக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழிசை, இதுகுறித்து  அவருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

ஆனாலும், தமிழிசையின் நிகழ்ச்சியில் தானாக வந்து கலந்துகொண்டார் எச்.ராஜா.

“இந்த அளவுக்கு தமிழிசைக்கு தைரியம் வந்தது எப்படி” என பாஜக தரப்பிலேயே ஆச்சரியப்படுகிறார்கள்.

ஆனால் இதற்கும் மேலும் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் தமிழிசை.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாவது:

எச்.ராஜா விவகராம் குறித்து அகில இந்திய தலைவரான அமித்ஷாவிடம் பேசினார்.

“ தமிழக பா.ஜ.க மீது மக்களிடையே அவப்பெயர் உருவாகும் வித்ததிலேயே எச்.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார். இப்போது பெரியார் குறித்து அவர் தெரிவித்த கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  பெரியார், அரசியலுக்கு அப்பாற்பட்டவர். மறைந்த தலைவர்.  அவரை விமர்சனம் செய்வதால், பா.ஜ.க-வுக்கு எந்த பயனும் கிடையாது.

ஆனால் எச்.ராஜா தொடர்ந்து அப்படிபேசி வருகிறார்.

அவர் மீது நடவடிக்கை எடுப்பதே கட்சிக்கு நல்லது” என்று கூறியிருக்கிறார்.

இதற்கு அமித்ஷா, “ராஜா மீது நடவடிக்கை  எடுக்க வேண்டாம். அதே நேரம் அவருக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

இதுவே தமிழிசைக்கு பூஸ்ட் ஆக இருக்கிறது. அதனால்தான் காரைக்குடி நிகழ்ச்சி குறித்து ராஜாவுக்கு அவர் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, ” தமிழக பா.ஜ.க-வின் தலைமைப் பொறுப்பிலிருந்து தமிழிசையை நீக்க வேண்டும் என   சிலர், மத்திய தலைமைக்கு அழுத்தம் கொடுத்தபடியே இருந்தனர். அவர்களிடம் தலைமை, அதுபோன்ற கோரிக்கைகளுடன் வராதீர்கள் என்று கூறிவிட்டது.

தவிர, இனி ஆளாளுக்கு கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும் மத்திய தலைமை உத்தரவிட்டிருக்கிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் தமிழிசை” என்றார் அந்த மூத்த நிர்வாகி.