அனுமதியின்றி விடுப்பு: ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

சென்னை:

முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி  அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே வரும் கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு அமல்படுத்தி, அவர்களின் வருகை பதிவேடு கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த அதிரடியாக அனுமதியின்றி விடுப்பு எடுத்தால் சம்பளம் கட் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். இவர்கள், பணியில் இருப்பது போன்று கையெழுத்து போட்டுவிட்டு போராட்டங்களில் கலந்து கொள்வ தாகவும், ஒருசிலர் அடுத்த நாள்  சென்று, முந்தைய நாள் பணி செய்தது போன்ற  வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுவதாகவும் புகார்கள் குவிந்து வருகின்றன.

இதன் காரணமாக இவர்கள் விடுமுறை எடுத்தற்கான சான்று இல்லாமல், அவர் களின் முழு சம்பளமும் எவ்வித பிடித்தமுமின்றி வழங்கப்பட்டு வருகிறது. இது பலர் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், விடுமுறை எடுப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை  துணைச் செயலாளர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும், விண்ணப்பம் அளிக்காமல் விடுப்பு எடுக்கும் ஆசிரியர் அல்லது ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட அலுவலர், பணி நேரத்தில் உயிரிழந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கூடாது.

முறையான அனுமதியின்றியும், விண்ணப்பம் அளிக்காமல் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையினை மேற்கொள்ள தவறும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.