எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் நிர்வாகிகளுக்கு எல்இடி டிவி பரிசு! அதிமுகவின் அவலம்….

நெல்லை:

எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் நிர்வாகிகளுக்கு எல்இடி டிவி பரிசு குலுக்கல் முறையில் வழங்கப்படும் என்று நெல்லை மாவட்ட அதிமுகவில் அறிவிக்கப்பட்டு உள்ளது, அதிமுகவின் தற்போதைய அவலத்தை எடுத்துக்காட்டுகிறது.

எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவுக்கு தொண்டர்களை திரட்டும் நோக்கில், கூட்டத்தில் கலந்துகொள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை அறிவித்து உள்ளது அதிமுக கட்சி… இது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக நிறுவனர், மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன், மாநிலங்களில் மிகச்சிறந்த நல்லாட்சி நடைபெறும் முதன்மை மாநிலம் என்ற கழக அரசின் சாதனைகள், நாங்குநேரி, விக்கிர வாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்கள் வெற்றி, ஊரக உள்ளாட்சி தேர்தலில்  வெற்றி ஆகியவற்றை மக்களிடம் விளக்கும் விதமாக 4 நாட்கள் தொடர் பொதுக்கூட்டம் நடத்திட அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக நிர்வாககிளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதன்படிபடி மாநிலம் முழுவதும் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில்,நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் இன்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி, அதிமுக சார்பில், அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு கழக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அதில், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளின் பெயர்களை வட்டம் வாரியாக, பொறிக்கப்பட்டதுடன், கடைசியில் கூட்டத்தில் பங்குபெறும் அதிமுக நிர்வாகிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்றும் அதிரடியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்பரிசாக 32 இஞ்ச் எல்இடி டிவியும், 2வது பரிசாக 1கிராம் தங்க நாணயமும், 3வது பரிசாக ரூ.3 ஆயிரம் பரிசும் வழங்கப்படும் என்றும், திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான,  தச்சமொழி என்.கணேசராஜா அறிவித்து உள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளரின் இந்த பரிசு அறிவிப்பு அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் அடுத்த ஆண்டு 50ஆண்டு நிறுவன நாளை  கொண்டாட உள்ள அதிமுகவுக்கு இப்படி யொரு நிலையா என்று கேள்வி எழுந்துள்ளது.

கூட்டத்திற்கு ஆட்களை திரட்டி வரும்  நோக்கிலேயே, வட்டச்செயலாளர்களுக்கு இதுபோன்று பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது…

எப்படி இருந்தாலும், 1977ம் ஆண்டு முதல் தற்போது (2020) வரை 6 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள அதிமுக, ஜெ. மறைவைத் தொடர்ந்து, வலுவிலந்தும், களையிழந்தும் காணப்படும் நிலையில், அதிமுகவின் அடிமட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் தற்போதைய தலைமைமீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

‘இதை சரிகட்டும் நோக்கிலேயே வட்டக்கழகச் செயலாளர்களுக்கு பரிசுகள் அறிவித்து, அதிமுக தலைமை குஷிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி