இந்து கோவில் இடிக்கப்பட்டு தான் அயோத்தியில் மசூதி கட்டப்பட்டது என தொல்லியல் அறிஞர் கூறியும், அதை இடதுசாரிகள் ஏற்க மறுத்துவிட்டதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சாஸ்த்ரா சட்ட பள்ளி சாா்பில் மூத்த வழக்கறிஞா் பராசரனுக்கு பாராட்டு விழா சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, கா்நாடக உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என் குமாா், மூத்த வழக்கறிஞா்கள் சி.எஸ் வைத்தியநாதன், ஏ.ஆா்.எல் சுந்தரேசன், பாஜக மூத்த தலைவா்கள் இல. கணேசன், எச். ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் போது பேசிய வழக்கறிஞர் பராசரன், “அயோத்தி வழக்கில் 14,000 பக்க ஆதாரங்களைக் கொண்டு வெற்றி பெறச் செய்ய முடிந்தது. இது ராமருடைய வழக்கு. இந்தத் தீா்ப்புக்காக 162 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இனி ராமருக்கு கோவில் கட்டும் பணி மட்டுமே மீதம் உள்ளது. அதை விரைந்து செய்தால், ராமர் கோவிலை காணும் பாக்கியம் எனக்கு கிட்டும்” என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, “சிறந்த பணிவு மற்றும் மிகச் சிறந்த அறிவாற்றல் மிக்கவா் மூத்த வழக்கறிஞா் பராசரன் அவர்கள், சபரிமலை வழக்கு, ராமஜென்ம பூமி வழக்கில் பங்கேற்று வாதாடினாா். ராம ஜென்மபூமி வழக்கில் அவா் வாதாடியது மிகவும் முக்கியமானது. இந்த வழக்கில் வாதாடி, இந்தியாவின் ஒவ்வொருவரின் இதயத்தையும் தொட்டாா். அயோத்தி, மதுரா, காசி ஆகியவை வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. ஆன்மிகத்துக்கும் மிக முக்கியமானவை.

அயோத்தி வழக்கில் இந்து – முஸ்லிம் பிரச்சனை கிடையாது. அயோத்தி இந்துக்களுக்கு உணா்வுபூா்வமானது. அது ராமா் பிறந்த இடம். தொல்லியல் அறிஞா் கே.கே முகமது ஆய்வு செய்து, அந்த இடத்தில் இந்து கோவில் இடிக்கப்பட்டு தான் பாபா் மசூதி கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தாா். இதை இடதுசாரிகள் ஏற்கவில்லை. இந்தத் தீா்ப்பில் அரசியல் நுணுக்கமும், சட்ட நுணுக்கமும் உள்ளது. பராசரன் அவர்களை போல யாராலும் வாதாட முடியாது. இந்த வழக்கில் எல்லோரும் ஏற்கும் தீா்ப்பை அவர் பெற்றுத்தந்துள்ளார்

ராம ஜென்ம பூமி வழக்கு, சாதாரண வழக்கு அல்ல. இந்திய சட்டம் மற்றும் நீதித்துறையில் சிறந்த முன்னுதாரணம். இதற்காக எனது பாராட்டுகளை பராசரன் அவர்களுக்கு தெரிவிக்கின்றேன். எல்லா பிரிவிலும் சிறந்த அறிவு இருந்தாலும், நீதிமன்றத்தில் வாதாடுவது சிறப்பு வாய்ந்தது. இந்தத் தீா்ப்பு யாருடைய மனதையும் காயப்படுத்தவில்லை. இதுவரை இல்லாத தீா்ப்பு. இதை எல்லாரும் ஏற்றுக் கொண்டனா். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த தீா்ப்பு வழங்கினா். அதுபோல சபரிமலை வழக்கிலும் அவா் வாதாட வேண்டும். நிச்சயம் அந்த வழக்கிலும் நீதியை நிலைநாட்டி, பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான தீர்ப்பை அவர் பெற்றுத் தருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.